
விரைவில் பிள்ளையானின் கொலைப் பட்டியல் வரும்
பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் முதலமைச்சரான காலத்தில் இருந்து அவரது தொழில் காணி பிடிப்பது, ஆட்களை கடத்துவது,கொலை செய்வது, கொள்ளையடிப்பது தான்.பிள்ளையான், எனது சகோதரன் கோவிந்தராஜனை கடத்திச் சென்று கொன்றது தொடக்கம் எனது பத்திரிகையாளரை கொன்றது வரைக்கும் செய்த கொலைகள் தொடர்பான விபரங்களை ஆதாரங்களுடன் கூடிய விரைவில் வெளியிடப் போவதாக ஈழவர் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) செயலாளர் நாயகம் இராஜநாயகம் பிரபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடியில் உள்ள ஊடக வள நிலையமான வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்று ஊடக மாநாட்டில் இவ்வாறு அவர் தெரிவித்தார்..
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது தமது கதிரைகளை தக்கவைப்பதற்காக அப்பாவி மக்களை இலக்குவைத்த தாக்குதல் என்பது, சர்வதேசம் மட்டுமல்ல இலங்கையில் உள்ள சாதாரண மக்களுக்கும் தெரியும்.
பிள்ளையான் சிறையில் இருக்கும்போது சஹ்ரானின் சகோதரனை சந்தித்தாகவும் அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். என்று தனக்கு அன்று தெரியும் என்று கூறியுள்ளார்.அன்று அவருக்கு இது தெரிந்திருந்தால் ஏன் அவர் அதனை உரிய பாதுகாப்பு தரப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை.
எனது அம்மாவின் தங்கையின் மகன் கோவிந்தராஜன் என்பரை கடத்திச் சென்று படுகொலைசெய்தது, மாநகரசபை உறுப்பினராக நான் கடமையாற்றியபோது எனது பத்திரிகையாளராக இருந்தவரை கடத்திச் சென்று கொலை செய்தது வரையான பல கொலைகள் அடங்கிய பட்டிலை ஆதாரத்துடன் மிக விரைவில் வெளியிடுவேன்.
தான் தப்புவதற்காக இன்று பிள்ளையான் கொஞ்சம் மக்களை ஏற்றிவந்து தனது காரியாலயத்திற்குள் வைத்துக்கொண்டு அவர்கள் சொல்வதை சொல்லிக் கொண்டு மக்களை ஆர்ப்பாட்டம் செய்ய வைக்கின்றார்கள்.
நீங்கள் நல்லவர்கள்,குற்றமற்றவர்கள் என்றால் அதனை மக்கள் குறை வேண்டும். வடகிழக்கில் உள்ள மக்கள் வீதியிலிறங்கி பிள்ளையான் நல்லவர் ,உத்தமர் என்று சொல்ல வேண்டும். நீங்கள் பஸ்களில் ஏற்றி வந்தவர்கள் அப்பாவி மக்கள்,ஏதாவது கிடைக்கும் என்ற அவாவுடன் வந்தவர்கள்.
மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை பகுதி நாங்கள் 83,84 விடுதலை போராட்டத்தில் பங்கு கொள்ளுகின்றபோது அங்கு 3500 ஏக்கர் நிலப்பரப்பில் 300 குடும்பங்களுக்கு மேல் சேனைப் பயிர்செய்கை மற்றும் கால்நடை வளர்ப்பு செய்து கொண்டிருந்தவர்கள். தமிழ் மக்களின் பாரம்பரியம் அந்த மக்களுக்கான இடத்தை பெற்றுக் கொடுக்க தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும் .
அது மட்டுமல்ல பிள்ளையான் முதலமைச்சரான காலத்தில் இருந்து அவருக்கு தொழில் காணி பிடிப்பதுதான். வாழைச்சேனையில் இருந்து மேற்குபக்கமாக பார்த்தால் 300 ஏக்கர் தென்னம் தோப்பு அவருடைய அப்பாவின் பரம்பரை என்றும் 5 தலைமுறைக்கு மேலாக உள்ளது என ஊடகம் ஒன்றில் பேட்டி வழங்கியுள்ளார். இதற்கு எங்கேயோ கள்ள உறுதியை செய்துள்ளார்.
வாகரையில் 2 ஆயிரம் ஏக்கர் காணியை சூறையாடி ஒவ்வொருவருடைய பினாமி பெயரில் எழுதிவைத்துள்ளதுடன் ஆள்கடத்துவது, கொலை செய்வதும், கொள்ளையடிப்பதும் தான் அவரின் தொழில்.அப்பாவி மக்களின் இதனை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

