முள்ளிவாய்க்காலில் எங்கும் காணப்படும் ராணுவத் தடுப்புகள்

முள்ளிவாய்க்காலில் எங்கும் காணப்படும் ராணுவத் தடுப்புகள்

முள்ளிவாய்க்காலில் இப்போது போர் எதுவும் நடக்கவில்லை. ஆனால், எங்கு திரும்பினாலும் ராணுவத்தைப் பார்க்க முடிகிறது. ராணுவ முகாம்கள், கண்காணிப்புக் கோபுரங்கள், சாலைச் சோதனைச் சாவடிகள் என ஏதாவது ஒரு வகையில் குறைந்தது 5 இடங்களிலாவது துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் வசித்தால் ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருப்பதாகத்தான் பொருள்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக கருதப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கு அருகிலேயே சிறியதும் பெரியதுமாக பல ராணுவ முகாம்கள் இருக்கின்றன. இவை தவிர சிறிய கண்காணிப்புக் கோபுரங்களும் ஆங்காங்கே உண்டு.

இத்தகைய கட்டுப்பாடுகளால் ராணுவத்துக்குத் தெரியாமல் பெரிய கூட்டங்களைச் சேர்க்கவோ, பயணம் மேற்கொள்ளவோ இங்கிருப்பவர்களால் இயலாது.

கடைசி நாள்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் மக்களும் சரணடைய வரும்போது பயன்படுத்தியதாகக் கூறப்படும் வட்டுவாகல் பாலத்தின் இருபுறத்திலும் ராணுவத் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒரேயொரு நான்கு சக்கர வாகனம் மட்டும் செல்லும் அளவு மட்டுமே அகலம் கொண்ட அந்த பாலம்தான் முள்ளிவாய்க்காலின் நுழைவு வாயில்.

காணாமல் போனவர்கள் பற்றி நாம் கேட்ட கண்ணீர்க் கதைகளில் பெரும்பாலானவை இந்த பாலத்தில் இருந்தே தொடங்குகின்றன. போரின் கடைசி நாள்களில் பாலத்தின் இருபுறத்திலும் உள்ள நீர்நிலையில் ஏராளமான உடல்கள் கிடந்ததைக் கண்டதாக பலரும் கூறுகின்றனர்.

பிபிசி குழு சென்ற நாளில் புத்தர் பிறந்த, ஞானம் பெற்ற ‘வெசாக்’ திருவிழாவுக்காக அந்த நீரில் செயற்கையாக தாமரை வடிவங்களைக் கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

முல்லைத் தீவில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் முள்ளிவாய்க்கால் இருக்கிறது. அங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் புதுக்குடியிருப்பு உள்ளது. இவற்றை இணைப்பதற்குத் தரமான சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. போர் நடந்ததற்கான எந்த அறிகுறியையும் இந்த சாலை நெடுகிலும் காண முடியாது.

போரின் கடைசி நாள்களில் மருத்துவமனையாகச் செயல்பட்ட முள்ளிவாய்க்கால் பள்ளி, அப்போது தாக்குதலுக்கு உள்ளானது என அதற்கு அருகில் குடியிருப்பவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இப்போது பள்ளி புதுப்பிக்கப்பட்டுவிட்டது.

முள்ளிவாய்க்காலில் போர் நடந்திருக்கிறது என்பதற்கு எஞ்சிய சாட்சியங்களாக இருப்பவை முள்ளிவாய்க்கால் கடற்கரையோரம் தரைதட்டி நிற்கும் கப்பலும், கரையில் துருப்பிடித்துக் கிடக்கும் கவச வாகனம் உள்ளிட்டவையும்தான். அந்தச் சிதைவுகளுக்கு அருகிலேயே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவை தவிர தாக்குதலுக்கு உள்ளான வீடுகளில் பீரங்கிக் குண்டுகள் துளைத்த அடையாளங்களைக் காண முடிகிறது. ஆனால், அவை படிப்படியாக இடிக்கப்பட்டு புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தன்னார்வ அமைப்புகள் இந்த வீடுகளைக் கட்ட உதவுகின்றன.

பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் தங்கியிருந்த பகுதி இப்போது மணல் நிறைந்த மைதானம் போலக் காணப்படுகிறது. பொதுவாக இந்தப் பகுதிக்கு ஆட்கள் வருவது மிகவும் குறைவுதான் என இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். இங்குதான் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது.

போர் முடிந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகும் மே 18-ஆம் தேதியன்று இந்த நினைவிடத்தில் அழுகுரல்கள் கேட்டன. உறவுகளைப் பறிகொடுத்தவர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள் என பல ஆயிரம் பேர் இந்தப் பகுதிக்கு வந்து போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.

“இங்கு கொத்துக் குண்டுகள் வீசப்பட்டன” என்கின்றனர் நினைவேந்தலில் பங்கேற்றவர்கள்.

நினைவேந்தல் நிகழ்வுக்கு இளைஞர்களாக வந்து நின்ற பலர் அன்று குழந்தைகளாக இதே இடத்தில் இருந்தவர்கள். அவர்களிடமும் போரின் வலியைக் காண முடிந்தது. கடும் வெயிலில் சுமார் அரைமணி நேரம் நடந்த நிகழ்ச்சி முடியும் தருணத்தில் சில நிமிடங்கள் வானிலை மாறி மழைச்சாறல் பெய்ததை சிலர் தங்கள் நம்பிக்கையோடு பொருத்திப் பார்த்தார்கள்.

போரில் சரணடைந்து, திரும்பி வராமல் இருக்கும் பலரது உறவினர்களைச் சந்தித்தோம். அவர்களில் பல பெண்கள் அசாதாரணமான துணிச்சலுடன் பேசுகிறார்கள். தங்களது கணவர், உறவினர், சகோதரர் என காணாமல் போனவர்களைத் தேடும் முயற்சியில் இவர்கள் ஐக்கிய நாடுகள் சபை வரை இன்றும் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

காவல்துறை, ராணுவ விசாரணைகளைப் பற்றி கவலைப்படவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, “எல்லா மோசமான நாட்களையும் பார்த்தாகிவிட்டது”.

காவல்துறையும் ராணுவமும் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டாலும் மக்கள் நடமாட்டத்தைத் தடுக்கவில்லை. மக்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், கண்காணிப்பே அச்சுறுத்துவதாக இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இலங்கை ராணுவத்தினர் கூறும் நந்திக் கடல் எனப்படும் கடற்காயல் பகுதி, முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கு அருகே செல்லும் சாலைக்கு அப்பால் இருக்கிறது. இந்தப் பகுதியை ஒட்டி ராணுவத் தடுப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் கடற்கரை, நினைவிடம், நந்திக்கடல் ஆகியவை அனைத்தும் ஒன்றிரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளாகவே அமைந்திருக்கின்றன.

முல்லைத்தீவிலும் புதுக்குடியிருப்பிலும் சற்று பெரிய கடைகளையும் மாடி வீடுகளையும், பள்ளிகளையும் பார்க்க முடிகிறது. புதுக்குடியிருப்பில் சிறிய அளவிலான சந்தை இயங்கிக் கொண்டிருக்கிறது.

முல்லைத்தீவில் இருந்து முள்ளியவிளை செல்லும் சாலை மிகத்தரமாகவும் அகலமாகவும் போடப்பட்டிருக்கிறது. வங்கிகள், ஏடிஎம்கள், பன்னாட்டு நிறுவனங்களின் அங்காடிகள் போன்றவை இங்கு உண்டு.

இடிந்துபோன கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. கோயில்கள் மீளமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இவையெல்லாம் போரின் தாக்கத்தை மறைப்பதற்காகவே அரசு செய்திருக்கிறது என நம்மிடம் பேசிய சிலர் குறைகூறுகிறார்கள்.

பெரும்பாலான வீடுகள் ஓடுகள் வேயப்பட்டவை. சுற்றுச்சுவர்கள் தகரங்களால் அமைக்கப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்காலில் சாதாரணமான நாளில் ஒரு பேரமைதி நிலவுகிறது. அதை இங்குள்ளவர்கள் “ராணுவ அமைதி” என்கிறார்கள்.

இலங்கையின் பல முக்கியமான நகரங்களைப் போலவே முல்லைத் தீவிலும் முள்ளிவாய்க்காலிலும் நீண்ட, அழகான கடற்கரைகள் இருக்கின்றன. ஆனால், பிற நகரங்களைப் போல இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகை தருவதில்லை. முல்லைத்தீவில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் முதல் நாள் எங்களைத் தவிர வேறு விருந்தினர் யாருமில்லை. அடுத்த நாளில் ஓரிருவர் வந்தார்கள்.

முள்ளிவாய்க்காலில் எந்த வீட்டுக்குச் சென்று கேட்டாலும், தெருவில் செல்லும் யாரிடம் பேசினாலும் அவர்களுக்குச் சொல்வதற்கென்று போரின் கடைசிக் கால நினைவுகள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை கொடூரமானவை. ஒரு சிலர் போருக்கு நடுவே வேறு ஊர்களுக்குத் தப்பிச் சென்றுவிட்டு, பின்னர் திரும்பியிருக்கிறார்கள்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியும் அரசியல் நெருக்கடியும் வடக்கு கிழக்கில் பெரிய போராட்டங்களை ஏற்படுத்தவில்லை. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றவர்கள், “எங்களுக்கு அதைவிடப் பெரிய நோக்கம் இருக்கிறது” என்கிறார்கள். போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள்.

கொழும்பு காலி முகத்திடலில் நடக்கும் போராட்டங்களுக்கு இங்கிருந்தும் சிலர் சென்றிருக்கிறார்கள். ஆனால் “போராட்டங்களில் உடலளவில் பங்கேற்றாலும், மனம் அதில் முழுமையாக ஈடுபடவில்லை” என்கிறார்கள். போரின் இறுதி நாள்களில் நடந்தவற்றுக்கு “நீதி” பெறுவதை தவிர்த்துவிட்டு, வேறு எதுவும் முதன்மையில்லை என்பதே அவர்களது மனக்குறிப்பு.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )