வடக்கில் மக்களின் காணிகள் டிசம்பரில் விடுவிக்கப்படும்

வடக்கில் மக்களின் காணிகள் டிசம்பரில் விடுவிக்கப்படும்

வடக்கு மாகாணத்தில் வனவள திணைக்களத்தின் கீழுள்ள விவசாய நிலங்கள் மற்றும் உரித்து உடைய மக்களின் காணிகளை இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற காடு பேணல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த கோரிக்கையொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

செல்வம் அடைக்கலநாதன் எம்.பி உரையாற்றுகையில்,

வடக்கு மாகாணத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் செயற்படுத்தப்படுவது குறைவாகவே உள்ளன. அந்த வகையில் விவசாய நிலங்கள், வீட்டு நிலங்கள் மற்றும் மக்களின் உறுதி காணிகள், அழிக்கப்பட்ட குளங்களைக் கூட மீள செப்பனிட முடியாத நிலைமையே உள்ளது. எங்களுடைய பிரதேச செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கும் தீர்மானங்களை செயற்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தினாலே பிரச்சினைகள் பல தீர்ந்துவிடும் என்றார்.

இதன்போது அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி பதிலளித்து தெரிவிக்கையில்,

காணி தொடர்பான பிரச்சினைகளை இந்த வருடத்தின் டிசம்பர் மாதத்தில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் அரசாங்க அதிபர் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதனால் இந்த விடயம் தொடர்பில் கவலைப்படத் தேவையில்லை. அனைத்து காணிகளையும் நாங்கள் காணி ஆணைக்குழுவிடம் ஒப்படைப்போம். அதன்படி காணிகளுக்கான உரித்துகள் வழங்கப்படும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )