
பிணக்காட்டின் இறுதி நாள்!
வானம் கந்தகப் புகைகளால்
வன்புணரப்பட்டு..
புவியெங்கும்
தீட்டுக்கள்
வழிந்து கொண்டிருந்த
விடிகாலைப் பொழுதொன்று….!!
சாவின் முனகலையும் இழந்து
சத்தங்களைக் குறைத்து
சவமாய்க் கிடந்தது!
சடங்குகள்… சம்பிரதாயங்கள்…
அந்தரங்கங்கள்… பிடிமானங்கள்…
துணிச்சல்கள் – எதுவுமற்று
மௌனமாகி…
முன்செல்லும்
பிசாசுகளின் பின்னால்
நடக்கத் தொடங்கினோம்!!
குழந்தைகளையும்
முட்களையும்
ஒன்றாக்கியது …
பிசாசுக் குட்டிகள்
ஈனக்குரல் எடுத்து
கதறும் ஓசை காற்றில்
ஏறி உலகத்தின்
வாசல் வரை சென்றது…
வான் இறங்கி வரவே இல்லை!
எந்த வல்லரசுகளும்…
நாம் தமிழர் என்பதால்!! .
எம் தெருக்களில்..
கற்களும் முட்களும்
அடங்கிப்போக..
பிணங்களும்
சதைத்துண்டங்களும்
இடையூறாகியது
கால் வழியில்..
பெரும் வெடி ஓசை அடங்கி
சன்னங்கள்
மட்டும் சடசடக்க
வீதி வீதியாய்
முனங்கல்கள் கேட்டன!!
முல்லை–வாய்க்காலில்
ஓடிய குருதியும்…!
வட்டு வாகலில் மிதந்த
பிணங்களும்……!!
ஒரு துளி தண்ணீருக்காய்
வெம்பிய உயிர்கள்
தேடுவார் அற்று
உருக்குலைந்து போனது!!
இத்தனை காலம்
ஓடிமறைந்தாலும்
வற்றாது நெஞ்சில்
நஞ்சாய் எரிகிறது!
உயிருக்காய்
ஊசலாடிக் கொண்டிருந்த
அன்றைய நாளை..
பிசாசுகளின் வாரிசுகள்
சாத்தான்களின் திருமண
நாளாக்கி
எம் இரத்த
விருந்து
பரிமாறப்பட்டது!
-மிதயா கானவி-