
வலி சுமந்த முள்ளிவாய்க்கால்!!
-அமுதுபவா-
மறக்க முடியாத நினைவலைகளோடு, தினம் தினம் போராடும் மனதை சமப்படுத்த முடியாமல் தவிக்கும் தவிப்பு யாருக்குப் புரியும். இம் மாதம் தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத தமிழ் இனவழிப்பு மாதம்.
நான் இவ் இடப்பெயர்வின் போது நிறைய வலிகளைச் சந்தித்துள்ளேன். இதில் நான் இராணுவத்திடம் சரணடைந்ததில் இருந்து செட்டிகுளம் முகாம் வரை சென்ற கதையைக் கூறுகின்றேன். இவை எல்லாம் வாழ்வில் மறக்க முடியாத வலி தந்த காலங்கள்.
நான் 2008 யூலை மாதம் 14ம் திகதியென நினைக்கிறேன் இடம்பெயரத் தொடங்கியது. ஆனால் இடைப்பட்ட காலக்கதையைக் கூறாமல் 2009 ஏப்ரல் 19 திகதி சரணடைய சென்றதில் இருந்து இதைத் தொடர்கிறேன்…..
நானும் எனது இரு பிள்ளைகளுமாக, வேறு சிலருடன் சேர்ந்து இரவு மாத்தளன் கடற்கரையிலுள்ள தடுப்பணையைச் சென்றடைந்தோம். நானும் எனது பிள்ளைகளும், மண் தடுப்பணையில் காணப்பட்ட முள்வேலியில் செருகப்பட்டிருந்த ஓலையை இழுத்து, முட்கம்பியை உயர்த்தினோம். பிள்ளைகள் இருவரையும் உள்ளே தள்ளி நானும் குதித்தேன். நாம் குதித்த இடம் மண்ணணைக்கு மண் வெட்டிய குழி போல மிக ஆழமாக இருந்தது. என் பிள்ளைகள் தாண்டு கொண்டிருந்தார்கள். ஒருகணத்தில் நான் இருவரையும் உயர்த்த விட்டு, நானும் பிள்ளைகள் உதவியுடன் மேலேறினேன்.
எங்களின் சொத்தாக பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களும், ஒரு அல்பம், ஒரு மாற்றுடை… இவை கொண்ட ஒரு ‘பண் பை’ எனப்படும் ஒரு சிறிய பை. இவைதான் எங்கள் சொத்து.. பிள்ளைகளுக்கு மார்பளவு தண்ணியும், எனக்கு இடுப்பளவுமாக காணப்பட்ட அந்த நந்திக்கடலேரியில் நடந்து கொண்டிருந்தோம்.
அதன் போது நான் கண்ட காட்சிகள் மறக்கக் கூடியவை அல்ல. நீரேரியில் சில உடல்கள் மிதப்பது இருளிலும் தெரிந்தது. ஏனெனில், இருட்டில் தட்டுத் தடுமாறி நடக்கும்போது அவ் உடலங்களில் தட்டுப்பட்டே நடந்தோம். மக்கள் அழுகையொலியோடு தம் உறவுகளைத் தேடித் தேடி கூப்பிட்டபடி வந்தனர். கிட்டதட்ட ஒருமணி நேரம் நடந்தோம். அங்கு ஒரு சிறிய நிலப்பகுதி முட்கம்பிகளால் சுற்றப்பட்டு ஒரு வழிப்பாதையாக, உள்நுழைய ஏதுவாக அமைக்கப்பட்டிருந்தது.
இராணுவத்திடம் சரணடையப் போகிறோமே….என்ன நடக்குமோ…?? எனத் தெரியாது துடிக்கும் இதயத்துடன், இருளடைந்த முகத்துடன், பிள்ளைகள் இருவரும் பயத்தால் என்னைக் கட்டிப்பிடித்தபடி நின்றிருந்தனர். நான் மட்டுமல்ல, அங்கு நின்றவர்களும் படபடப்போடுதான் நின்றிருந்தார்கள்.
மிகவும் மோசமான எறிகணை, பீரங்கி, விமானக்குண்டு வீச்சில்… உறவுகளைத் தொலைத்து…. அவயங்களை இழந்த உறவுகளை தோளில் சுமந்தபடி நடைப்பிணமாக நின்றிருந்தோம். இதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். என்னால் கோர்த்து அந்நிலையை எழுத வார்த்தைகள் வரவில்லை. கைகள் நடுங்க, கண்களை மூடியபடி என்னை சுதாகரித்துக் கொண்டு தொடர்கிறேன்.
அங்கிருந்த ஆயிரக் கணக்கானவர்களோடு நாங்களும் நனைந்த உடைகளோடு நின்றிருந்தோம்.அங்கே நின்ற இராணுவத்தினர் எம்மை ஏளனமாக கடைசியில எங்க கிட்டவந்தீங்களா….?? என எக்காளமாய் ஏதோ வேற்றுக் கிரகவாசியைப் பார்ப்பது போலப் பார்த்தனர். நிச்சயமாக என்னால் அப்போதய மன உணர்வை சொல்ல முடியாது.
சிறிது நேரத்தில், அவர்கள் சிறு குழந்தைகளுடன் நின்றவர்களை கூப்பிட்டார்கள். அதன் பின் சிறுவர்கள், வயோதிபர்கள், இளைஞர், யுவதிகள் என வகைப்படுத்தி, உள்ளே எடுத்து, தலை முதல் கால்வரை தடவிப்பார்த்தனர். அந்த சிறு நிலப்பரப்பில் நாம் ஈர உடுப்புடன் உட்கார வைக்கப்பட்டோம். குழந்தைகளின் அழுகுரலும், இருமல் ஒலியும் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை.
இருண்டு நீண்டுகிடந்த இரவைப்போலவே, எங்கள் வாழ்க்கையும் இருண்டு போய் இருந்தது. விடியும் பொழுதில் மீண்டும் குடும்பம் குடும்பமாக வரிசையாக நிற்க வைத்து, மீண்டும் எம்மை ‘செக்கிங்’ என்ற பெயரில் தடவி, வெளியே விட்டார்கள். அது பெரியவெளி. அதிலிருந்து இரண்டு மைல்கள் நடக்க வேண்டி இருந்தது. இயலாதவர்களையும், காயப் பட்டவர்களையும் உழவு இயந்திரப் பெட்டியில் ஏற்றி அனுப்பினார்கள். நானும் பிள்ளைகளும், மற்றவர்களுடன் நடந்து சென்றோம். ஒருவர் முகத்திலும் சந்தோஷம் காணப்படவில்லை. மிகவும் பயந்தபடியே நடந்தோம்.
இராணுவ வாகனங்கள்….. இராணுவத்தினர் வெற்றிக் கதாநாயகர்கள் போல அங்குமிங்கும் நடந்து செல்கையில் மனம் கொதித்துப் போனது. ஆங்காங்கு காணப்பட்ட சிறுகுட்டைகளில் முகம் கழுவி, உடைகளில் இருந்த சேறையும் கழுவிக் கொண்டோம். மீண்டும் ஒரு இடைத்தங்கல் முகாம் போல ஒன்றில் அமர்த்தப்பட்டோம். அங்கே நின்ற ஒருவன் (ஊடகவியலாளர்) எனது மகனை இழுத்து, “கொட்டியா நல்லமா? நாங்க நல்லமா?” எனக்கேட்டான். என் மகன் “புலிமாமா நல்லம்..” என்று சொல்லி விடுவானோ? என எண்ணிய போது
என் உயிரே போய்விட்டது. எனது மகன்… எறிகணை வீச்சின் போது ஒரு பெண்ணின் தலை துண்டாகி வேப்பமரத்தில் தொங்கியதை பார்த்த நாளிலிருந்து அவன் பேசுவதில்லை. எனவே நான் அவனுக்குப் பேச வராது
என சைகை மூலம் சொன்னேன். விட்டு விட்டார்கள்.
பின் ஒரு மணியளவில் எங்களுக்கு தெருநாய்களுக்கு எறிவது போல பாண் தந்தார்கள். பின் மீண்டும் எம்மை பஸ்சில் அழைத்துச் செல்லப் போவதாக கூறி வரிசையில் நிற்க வைத்தார்கள். ஆண்கள், பெண்கள் என வகைப்படுத்தினார்கள். மகனை ஆண்கள் வரிசையில் நிற்க வைத்தார்கள்.
இங்கு எம்மை எந்த வித உடுப்புமில்லாமல் முழு நிர்வாணமாக நிற்க வைத்து சோதனையிட்டார்கள். நாம் அன்றே எம் தன்மானத்தை இழந்து விட்டோம். பிள்ளைகள் எதிரே பெற்றவர்கள் நிர்வாணமாக…. பெற்றவர் எதிரே பிள்ளைகள் நிர்வாணமாக… நாம் அதற்கு கூச்சப்பட்ட போது, எம்மை அடித்துக் கழற்றினார்கள். அது முடிந்து வெளியே வர, எனது மகனையும், மகளையும் முதல் பஸ்சில் ஏற்றிவிட்டார்கள். நான் அடுத்த பஸ்சில். போய் எனது பிள்ளைகளைக் காணும் வரை என் உயிர் என்னிடமில்லை..
இந்த உணர்வுகளை எழுத முடியவில்லை. அன்று அங்கு இந்த சூழலில் நின்றவர்களை கேட்டால் தெரியும். தேவிபுரத்திலுள்ள பாடசாலையொன்றில் பஸ் நிறுத்தப்பட்டு இறக்கப்பட்டோம். தாய்ப்பறவையைத் தேடி ஓடிவரும் குஞ்சுகள் போல இருவரும் ஓடி வந்து எனைக் கட்டிக் கொண்டனர். இங்கு மீண்டும் தரப்படுத்தல்……..
‘தமிழ் பேசும் துரோகக்கும்பல்’ தலைமையில் நடைபெற்றது. அங்கே
இயக்கம், எல்லைப்படை, மாவீரர், போராளிகுடும்பம், உதவியவர்கள் என வகைப்படுத்தி…. சந்தேகப்பட்டவர்களைப் பிடித்து வைத்து மற்றவர்களை
பஸ்சில் ஏறும்படி கட்டளையிட்டார்கள்.
அங்கு மீண்டும் அழுகைகள். பிள்ளைகளை விட்டு எப்படி பெற்றவர்கள் வர முடியும்? ஆனாலும் துப்பாக்கி முனையில் பஸ்சில் நாம் ஏற்றப்பட்டோம். மீண்டும் பயணம். இரவு எட்டு மணிபோல கிளிநொச்சி பழைய ஆஸ்பத்திரியில் இறக்கி விடப்பட்டோம். அங்கு எமக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. எமது ஆடைகள் ஈரப்பற்று காய்ந்து, நாமும் குளிக்காததாலோ என்னவோ அவர்கள் எல்லாரும் முகக்கவசம் அணிந்தே
பொட்டலங்களைத் தூக்கிப் போட்டார்கள். அங்கே இரவு தங்க வைக்கப்பட்டோம். எம்மால் மலசலம் கழிக்கக்கூட போக முடியாத நிலை. நரக வாழ்வின் உச்சக்கட்டம். ஒருவாறு மலசலகூடத்தில் நுழைந்து வெளிவர விடிந்து விட்டது. மீண்டும் காலை ஆறு மணியளவில் பஸ்சில் ஏற்றப்பட்டோம். கண்டி வீதியில் சென்றது பஸ். எங்கு போகிறோம் எனத் தெரியவில்லை. வவுனியா போவதாக பேசிக்கொண்டார்கள். வவுனியாவை மதியம் வந்தடைந்தோம். அங்கு ஒரு மைதானத்தில் இறக்கி விட்டார்கள். பின் மீண்டும் அங்கு தரப்படுத்தப்பட்டு, போராளிகள் தனி பஸ்சில் ஏற்றப்பட்டார்கள். அங்கு நின்றவர்களைப் பார்த்து ஒருவன் ஒலி பெருக்கியில் சொன்னான்,
“இங்கு இருப்பவர்கள் எல்லாரும் புலி ஆதரவாளர்கள் என்று தெரியும்…. நீங்கள் புலிகளுக்கு என்ன செய்தீங்க…? உள்ளதை சொல்லுங்க….
நாங்களா அறிஞ்சா பிறகு என்ன நடக்கும் என்று சொல்ல ஏலாது…” என்று. என் முறை வந்தது. நான் மெதுவாகச் சொன்னேன், “எனக்கு கணவர் இல்லாத படியால என்னிடம் வருவதில்லை. சில வேளைகளில் ஞாயிறு சாப்பாட்டு பார்சல் கொடுப்பேன்” என்றேன். என்னைப் பார்த்து, நானிருந்த கோலத்தையும் பிள்ளைகளையும் பார்த்துவிட்டு “போ!” என்று சொன்னான். பின் பஸ்ஸில் ஏற்றி மீண்டும் தொலைதூரப் பயணமாகி, இரவு ஏழு மணிபோல ஒரு முகாமினுள் இறக்கி விடப்பட்டோம். அது செட்டிகுள அருணாச்சல முகாமாகும். இங்கே நடந்த கதையை பின்பு கூறுகிறேன்.