பொருளாதார நெருக்கடியும், இலங்கைப் பெண்களும்

பொருளாதார நெருக்கடியும், இலங்கைப் பெண்களும்

-மாலினி மோகன்

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதாரத்தின் மந்த நிலையானது, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை விரைவு படுத்தியது எனலாம். இதனால் 2021 ஆம் ஆண்டின் வெளிநாட்டுக் கடன், நாட்டின் மொத்த உற்பத்தியில் 101% ஆக உயர்ந்தது. இதனால் மக்கள் தனது அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கையின் சாதாரண குடிமக்கள் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலை தொடர்கிறது. நாட்டின் தற்போதைய இப் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாமல் மீண்டும் மக்களை அவலத்தில் தள்ளும் இலங்கையின் அரசாங்கத்தை உடனே பதவி விலக வேண்டும் எனக் கோரி நாடு பூராகவும் பல்வேறு போராட்டங்கள் வலுப்பெற்று எங்கும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. தற்கால கொரோனா தொற்றின் தாக்கம், தொடர்ச்சியான எரிபொருள் தட்டுப்பாடு, பொருட்களின் விலையதிகரிப்பு, மின்சார துண்டிப்பு என்பன இலங்கை மக்களின் வாழ்வியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

“போல சிறக்கும் ஒரு வாழ்வு” என்ற நிலையற்ற நிலையில் இலங்கையில் வாழும் குடியினர் தமது அநீதிக்கு எதிரான போராட்டங்கள் மூலம், ஆணுக்கு பெண் நிகராக நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். பாரதி கண்ட புதுமை பெண்ணாய் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி வீழ்ச்சி எனும் காரணி பெண்களை போராட்டகாரர்களாக மீண்டும் ஒரு பரிமாணமாக காட்சியளிக்க செய்துள்ளது. எனினும் சமகாலத்தில் பெண் வர்க்கத்தினர் தமது அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்து செல்வது பெரும் சவால்களுக்கு மத்தியிலே தான் என்பதும் கண்கூடு.

ஒருபோதும் இல்லா வண்ணம் மக்கள் கூட்டம் தெருவில் எங்கும் எப்பொருளுக்கும் வரிசையில் நிற்கும் துர்ப்பாக்கிய நிலை இலங்கையை இன்று நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதோடு, அதுவே இன்று பேசுபொருளாகவும் உள்ளது. அதிலும் பெண்களின் நிலை சவால் மிக்க நிலையில் உள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்காக நாள் பூராவும் தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், கடைகளிலும் வரிசை காத்து நிற்பதால் வீட்டில் தனது குடும்பத்தை கவனிக்க முடியாமலும், உரிய பொழுதில் பணிகளுக்கு செல்ல முடியாமலும் போராடிக் கொண்டிருக்கிறாள். ஆயினும் அவளின் நாளாந்த கடமை பொறுப்புக்களை அவள் தட்டிக்கழித்து விடவில்லை என்றே கூற வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பெண்ணானவள் தன்னை அச்சூழ்றிலைக்கு ஏற்றாற் போல் மாற்றிக் கொள்கிறாள்.

மேலும் கூறுவதாயின் இலங்கையின் தற்போதைய ஊரடங்கு பொழுதுகளிலும் தனக்கென ஒரு சுயதொழிலை வீட்டிலிருந்தவாரே பார்த்துகொண்டு தன்னை இன்னுமொரு படி உயர்த்திக் கொள்கிறாள். தையல், விவசாயம், online business, என பல துறைகளில் தன்னையும் வளர்த்ததுக் கொண்டு தன் குடும்பத்தையும் காக்கும் பெண்ணினம் போல் உயர்ந்த இனம் உலகில் இல்லை எனலாம். முழு இலங்கையும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் போதும் தன் குடும்பத்தை சிக்கனத்தின் விளிம்பில் வைத்து சிதையாமல் காக்க பெண்களாலே மட்டுமே முடியும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )