
3000 க்கும் அதிகமான மாடுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன; அத்துமீறி காணிகள் அபகரிப்பு – மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் கவலை
மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளை வெளியேற்றி தமது மேய்ச்சல்தரை காணிகளை பாதுகாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றிய(சர்வ மத) பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை மயிலத்தமடு,மாதவனை பகுதியில் களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
நீண்டகாலமாக பண்ணையாளர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக இந்த களவிஜயத்தினை மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள்,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மேற்கொண்டிருந்தனர்.
அங்கு பண்ணையாளர்களை சந்தித்த மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள்,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் அப்பகுதியில் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துகொண்டனர்.
மயிலத்தமடு,மாதவனை பகுதியில் தற்போதைய காலத்தில் மிகவும் வறட்சியான காலநிலை நிலவுவதன் காரணமாக நீரைப் பெற்றுக் கொள்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் அந்தப் பகுதியில் குளம் ஒன்றை அமைத்து நீரை தேக்கிவைக்க நடவடிக்கையெடுக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற போதிலும் யாரும் அதனை கவனத்தில் கொள்வதில்லையெனவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நாளொன்றுக்கு 3000 லீற்றர் பால் கறக்கப்பட்டுவந்த நிலையில் வறட்சியான காலநிலை காரணமாக தற்போது ஒரு லீற்றர் பாலை கூட பெறமுடியாத நிலையில் விவசாயிகள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் சட்ட விரோதமாக தமது மேய்ச்சல்தரை காணிகளை பிடித்துவருபவர்களினால் தொடர்ச்சியாக தாங்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
2012 ஆம் ஆண்டு முதல் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்களின் சுமார் 3000க்கும் அதிகமான மாடுகள் கடத்தப்பட்டும் ,சுட்டுக் கொல்லப்பட்டுமுள்ளதாகவும் இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் பல்வேறு முறைப்பாடுகளை செய்துள்ள போதிலும் யாரும் கவனத்தில் கொள்வதில்லையெனவும் பண்ணையாளர் சங்க தலைவர் சு.நிமலன் தெரிவித்தார்.
தமது பகுதிகளில் யானைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்காக தமது பண்ணைகளை சூழவுள்ள பற்றைகளை வெட்டும்போது அங்குவரும் வனத்துறை அதிகாரிகள் தங்களை கைதுசெய்யமுற்படுவதுடன் அச்சுறுத்துவதாகவும் ஆனால் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து காடுகளை வெட்டியும் தீவைத்தும் காணிகளை அபகரிக்கும்போது இந்த வனத்துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்வதில்லையெனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோதிலும் இதுவரையில் நடைமுறைப்படுத்தவில்லையெனவும் இதனால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் நூற்றுக்கணக்கான சட்ட விரோத காணி அபகரிப்பாளர்கள் அப்பகுதியில் காடுகளை அழித்தும் மேய்ச்சல் தரைகளை தீவைத்து அழித்தும் காணி அபகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதை காணமுடிந்தது.
குறிப்பாக மகாவலி அதிகார சபையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் முழுமையான உதவியுடன் அங்கு காடுகள் அழிக்கப்பட்டும் மேய்ச்சல் தரைகள் தீயிடப்பட்டு காணிகள் அபகரிக்கப்படுவதை காணமுடிந்தது.
மேய்ச்சல் தரை நிலங்கள் எரியூட்டப்படுவதனால் தமது கால்நடைகள் உணவை பெற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலையுள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

