
சீனாவின் ஆய்வுக் கப்பல் வருவதால் இலங்கை -இந்திய உறவில் விரிசல் ஏற்படும் நிலை!
சீனாவுக்குச் சொந்தமான ஆய்வுக் கப்பலான ‘சி வாங் 6 ‘ இலங்கை வருவதற்கு அரசாங்கம் அனுமதித்தமையின் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி எதிர்வரும் அக்டோபர் மாதம் சீனாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதால், அதற்கான பின்னணியை தயார் செய்வதற்காகவே இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்தை மீறி இந்தக் கப்பலை இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் சீன கப்பல்களை அடிப்படையாகக் கொண்ட நெருக்கடியை எதிர்கொள்வது இது இரண்டாவது தடவையாகும். ஜனாதிபதியாக பதவியேற்ற சில நாட்களில் சீன உயர் தொழில்நுட்பத் தகவல் தொடர்புக் கப்பல் யுவான் வாங் 5 இந்தியாவின் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனால் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று ஒரு வருடங்களாக இந்திய அழைப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. ஜனாதிபதியின் சமீபத்திய இந்திய விஜயத்தின் போது, இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்கும் எந்த முடிவும் எடுக்கப்பட மாட்டாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை மீறி சீன கப்பலை அனுமதித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சதீவை மீட்கும் நடவடிக்கை தொடர்பில் தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றது. சீனாவின் இந்திய பெருங்கடல் பிரவேசத்தை கண்காணிப்பதற்கு கச்சதீவு முக்கிய பகுதியாக இருக்குமென இந்திய ஆய்வாளர்கள் கருதுவதால் இந்திய அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்துமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சீன கப்பலின் இலங்கை வருகை மற்றும் கச்சதீவு விவகாரம் இலங்கை – இந்திய உறவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்களாக எதிர்காலத்தில் இருக்குமெனவும் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

