
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இலங்கை வந்த சீன போர்க்கப்பல்
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் போர்க்கப்பலை, கொழும்பு துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக அனுமதிக்கப்பட்டமையால் இந்தியா கவலையடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சீன கடற்படையின் YANG 24 HAO என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வியாழக்கிழமை வந்தது. கடந்த ஒருவருடத்தில் இலங்கைக்குவரும் இரண்டாவது சீன போர்க்கப்பலாக இது உள்ளது.
கொழும்புக்கும் – டெல்லிக்கும் நிலவிவரும் உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் சீனாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக இந்தியாவின் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றன்றனர்.
கடந்த ஆண்டு அம்பாந்தோட்டையில் தரித்து நிறுத்தப்பட்ட சீன ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 (Yuan Wang 5 ) கப்பல் இந்தியாவை உளவு பார்க்கும் நோக்கிலேயே நிறுத்தப்பட்டதாக இந்தியா கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.
இலங்கையில் சீனாவின் கடற்படைத் தளத்தை அமைக்கும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டுவருவதாக வர்ஜீனியாவில் உள்ள வில்லியம் மற்றும் மேரி கல்லூரியில் உள்ள AIDDATA என்ற ஆராய்ச்சி நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சீன கடற்படையின் YANG 24 HAO என்ற போர்க்கப்பல் வருகை தொடர்பில் ஏற்கனவே இந்தியா அறிந்திருந்ததுடன், இதன் வருகையை தடுத்துநிறுத்த கொழும்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் இதனால் சிறிது காலம் கப்பலின் வருகை ஒத்திவைக்கப்பட்டிருந்ததாக ‘டெய்லி மிரர்“ செய்தி வெளியிட்டுள்ளது.
என்றாலும், “வியாழக்கிழமை சீனக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தற்கு இந்தியா தனது கவலையை இலங்கை அரசாங்கத்திடம் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பில் இந்திய அதிகாரிகளுக்கு இலங்கையால் விளக்கமளிக்கப்பட்ட போதிலும் இந்தியா அதில் திருப்பியடைவில்லை“ என economic times செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவும் சீனாவும் இந்து சமுத்திரத்தில் ஒரு முக்கியமான புள்ளியில் அமைந்துள்ள இலங்கையில் மூலோபாய நலன்களுக்காக போட்டியிடும் புவிசார் அரசியல் போட்டியாளர்களாக உள்ளன.
இலங்கை தனது துறைமுகங்களில் சீன இராணுவக் கப்பல்களை நிறுத்த அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற உலக வல்லரசுகளின் அழுத்தங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இலங்கை, வல்லரசுப் போட்டிக்குள் சிக்காமல் நடுநிலையான ஆசியாவை மையமாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கைக்காக நிற்கிறது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தமது இந்திய விஜயத்தின் போது தெரிவித்திருந்தார்.
தற்போது இலங்கை இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் சமமான நல்லுறவை நிர்வகிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஏனெனில் நாட்டின் வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைப்பதில் இரண்டு சக்திகளும் முக்கியமானவை.
இலங்கை தனது வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் பணியில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளையும் சமமான முக்கிய பங்காளிகளாகக் கருதுகிறது.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை முடிக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு கடன் மறுசீரமைப்புக்கான அனுமதியை வழங்கியிருந்தது. அத்துடன், 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் திட்டத்துக்கு அனுமதி வழங்கியிருந்தது.
முதல்கட்ட கடன் திட்டம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள சூழலில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அடுத்தகட்ட கடன் திட்டங்களுக்கான மீளாய்வு இடம்பெறவுள்ளது.
இத்தருணத்தில் இந்தியா, சீனா ஆகிய இருநாடுகளையும் இலங்கை சமமாக அணுக வேண்டிய சூழல் உள்ளது. அதனால் சீனாவின் இந்த போர்க்கப்பல் வருகையை இலங்கையால் கட்டுப்படுத்த முடியவில்லையென சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதேவேளை, கொழும்பு துறைமுறைமுகத்தில் தரித்து நிறுத்தப்பட்டுள்ள சீன கடற்படையின் YANG 24 HAO என்ற போர்க்கப்பல் சனிக்கிழமை இலங்கையைவிட்டு புறப்படவுள்ளது.

