
கொழும்பு மக்களை விரட்ட ரணில் முயற்சி
ஜனாதிபதிக்கு அதிக வாக்குகளை வழங்கிய கொழும்பு மக்களை அங்கிருந்து விரட்டுவதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாகவும் சாதாரண ஏழை மக்களின் காணிகளை பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளை பயன்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் நிறைவேற்று சபையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிசைவாசிகள், குறைந்த வருமானம் பெறும் வீடுகள் மற்றும் நடுத்தர வர்க்க வீட்டுத்திட்டங்கள் அனைத்தையும் அகற்றியுள்ளதாகவும், அவற்றை அரச தனியார் பங்காளித்துவத்தின் கீழ் புதிய திட்டங்களுக்கு வழங்குமாறு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் மேல் மாகாணங்களில் அபிவிருத்தி செய்யப்படாத அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் அதிகம் உள்ளதாகவும், இந்த காணிகள் தனியார் மற்றும் பொது பங்களிப்பின் கீழ் வெளிப்படைத்தன்மையுடன் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும், ஆனால் தற்போதைய அரசாங்கம் குடிசைகள், குறைந்த வருமானம் பெறும் வீடுகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வீடுகளை அகற்ற முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
சாதாரண ஏழை மக்களின் காணிகளை பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, பயன்படுத்தாமல் உள்ள சில அரச நிறுவனங்களுக்கு சொந்தமான காணிகளும் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளையும் இந்த திட்டங்களுக்கு நிலத்தை பயன்படுத்த வேண்டும் என்றார்.
கடந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 5 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு வந்த தற்போதைய ஜனாதிபதி, கொழும்பு தோட்டங்களில் வாழும் மக்கள் மற்றும் கொழும்பில் இருந்து வரும் நடுத்தர மக்களை விரட்ட முயற்சிப்பது பாரிய பிரச்சினை எனவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

