
திருகோணமலையில் பயிற்சி விமானம் வீழ்ந்து இருவர்பலி
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் திருகோணமலை சீன துறைமுக விமானப்படை தளத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் இரு அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
விமானப்படை சீன துறைமுகக் கல்லூரியில் விமானிகளுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்படும் பி.ரி. 06 ரக விமானம் நேற்று திங்கட்கிழமை முற்பகல் 11.27 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த இரண்டு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பயிற்றுவிற்பவரும் பயிற்சியாளருமே உயிரிழந்துள்ளனர்.இந்த இரு அதிகாரிகளும் 26 மற்றும் 37 வயதுடையவர்கள்.
இந்த விமானப்படை அதிகாரிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அதிகாரிகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

