
இலங்கையில் இடம்பெற்றது இனப் படுகொலையே- பா.ஜ.க. ; போர்க்குற்றவாளி இலங்கையை காப்பாற்றியது பா.ஜ.க.வே -தி.மு.க.
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என பாரதிய ஜனதாக்கட்சியின் தலைவரும் இந்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் போர்க்குற்றம் செய்த இலங்கை அரசைக் காப்பாற்றியது பா.ஜ.க. அரசுதான் என தி.மு.க.வின் கட்சிப் பத்திரிக்கையான முரசொலி குற்றம்சாட்டியுள்ளது.
இராமேஸ்வரத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பாளரான அண்ணாமலை தலைமையில் “என் மண் என் மக்கள்” என்ற பாதயாத்திரையில் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என பாரதிய ஜனதாக்கட்சியின் தலைவரும் இந்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தான் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை நடந்தது மற்றும் தமிழக கடற்றொழிலாளர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள் எனவும் அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.அவரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலும் இனப்படுகொலை என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இவ்வாறன நிலையில்தான் போர்க்குற்றம் செய்த இலங்கை அரசைக் காப்பாற்றியது பா.ஜ.க. அரசுதான் என தி.மு.க.வின் கட்சிப் பத்திரிக்கையான ‘முரசொலி’ குற்றம்சாட்டியுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இ லங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் – போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் பா.ஜ.க. அரசு எடுத்த நிலைப்பாடு என்ன? 2021 ஆம் ஆண்டு நடந்ததை மக்கள் மறந்திருப்பார்கள் என்று அமித்ஷா நினைக்கலாம்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 46 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடந்தது. இலங்கை அரசு குறித்தான தீர்மானம் 2021 மார்ச் 23 அன்று வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. இந்திய பா.ஜ.க. அரசு தீர்மானத்தினை ஆதரிக்காமல் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தது. போர்க்குற்றம் செய்த இலங்கை அரசைக் காப்பாற்றியது பா.ஜ.க. அரசு. இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி மற்றும் மாண்டிநீக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து இலங்கை அரசு குறித்தான தீர்மானத்தினை முன்வைத்தன.
இந்தியா தீர்மானத்தை ஆதரிக்காமல் வாக்கெடுப்பிலிருந்து வெளியேறியதற்கு இலங்கையின் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்தார். இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஜெனீவாவில் காட்டிய ஆதரவை இலங்கை பாராட்டுகிறது என்று தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டார். இந்தியாவின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கும் என்று இலங்கையின் வெளியுறவுத் துறை செயலர் ஜெயநாத் கொலம்பகே முன்கூட்டியே சொன்னார். ‘ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிற்கும்’ என்று உறுதியளித்திருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தீர்மானத்தினை ஆதரிக்காமல் இந்தியா புறக்கணித்தது, இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடாகவே அமைந்திருந்தது.
இலங்கையில் தமிழர்களுக்கு நடைபெற்று வருவது இனப்படுகொலை என்று அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதும், இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதுமே தமிழர்களின் கோரிக்கையாக இருந்தது. இதனை ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆதரிக்கவில்லை. தீர்மானத்தை ஆதரித்து 22 நாடுகள் வாக்களித்தன. பா.ஜ.க. அரசு, இலங்கைத் தமிழர்க்கு ஆதரவான நிலைப்பாட்டை அப்போது எடுக்கவில்லை.
தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் பா.ஜ.க. அரசின் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்கள். இவை எல்லாம் மறந்து போயிருக்கும் என்று நினைக்கிறார் அமைச்சர் அமித்ஷா.
அதானி குழுமத்துக்கு இலங்கை அரசாங்கம் வர்த்தகச் சலுகைகளைத் தருவதால் அந்த அரசாங்கத்தை பா.ஜ.க. அரசாங்கம் ஆதரிக்கும் என்று இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர்கள் அப்போது எழுதினார்கள். அதுதான் இறுதியாக நடந்தது. ”தற்போது வேகமெடுக்கும் இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணையைப் பயன்படுத்தி இலங்கை மீதான தங்களது அரசியல் நலனை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிறைவேற்றிக் கொள்கின்றன. அதனது சிறு வெளிப்பாடே அதானி குழுமத்திற்கு கொழும்பு மேற்கு கடற்கரை முனையத் திட்டம் கையளிக்கப்பட்டிருப்பதாகும்” என்று இலங்கை பத்திரிகைகள் (தினக்குரல்) எழுதின. இந்தியாவிலும் எக்கனாமிக் டைம்ஸ், இந்துஸ்தான் டைம்ஸ் இதழ்கள் எழுதின.
‘ஜூன் 2022ல் இலங்கை காற்றாலை மின்உற்பத்தி உரிமத்தை அதானிக்கு வழங்க வேண்டும் என மோடி அழுத்தம் கொடுப்பதாக ராஜபக்சே சொன்னார். இதுதான் உங்கள் வெளியுறவுக் கொள்கை. இது இந்திய வெளியுறவுக் கொள்கை அல்ல. அதானியின் வெளியுறவுக்கொள்கை” – – என்று பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்தார் ராகுல் காந்தி. இத்தகைய மர்மமான வெளியுறவுக் கொள்கையை வைத்திருக்கும் பா.ஜ.க.வுக்கு இலங்கைப் பிரச்சினையைப் பற்றிப் பேச உரிமை உண்டா?
2014 மே 19 ஆம் தேதி பசில் ராஜபக்ச ஒரு பேட்டி அளித்திருந்தார். அது ‘தினமணி’ இணைய தளத்தில் இன்றும் இருக்கிறது. “குஜராத்தில் மோடி நிறைவேற்றிய வாக்குறுதிகளைத் தான் ராஜபக்ச தம் நாட்டு மக்களுக்கு நிறைவேற்றினார். நரேந்திரமோடி தான் வெற்றி பெறுவார் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச ஏற்கனவே நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தார். அதுவும் தமிழ்நாட்டுக் கட்சிகளை நம்பாமல் நிச்சயம் மோடி தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினார். இலங்கையை ஆளும் ராஜபக்சவின் கட்சிக்கும் நரேந்திரமோடியின் கட்சிக்கும் இடையே பெரிய அளவில் நடைமுறை சித்தாந்தங்களில் வேறுபாடுகள் இருக்காது. காங்கிரஸ் ஆட்சியின் போது உள்நாட்டு அரசியல் தடைகளின் காரணமாக மன்மோகன்சிங் செய்ய முடியாமல் போனவற்றை கூட மோடி செய்து முடிப்பார்” என்று கூறினார். இதுதான் பசில் ராஜபக்ச சொன்னது ஆகும்.
இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கு இல்லை!

