
சங்கமித்தை பறாளைக்கு வரவுமில்லை அரசமரத்தை நடவும் இல்லை
“சங்கமித்தை இலங்கைக்கு வந்தது கிறிஸ்துவுக்கு முன், 3ஆம் நூற்றாண்டில் பறாளை முருகன் கட்டப்பட்டது கிறிஸ்த்துவுக்கு பின் 15ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். வரலாறு தெரியாவிட்டால் நாங்கள் கற்றுத்தருகின்றோம்.“ என சிரேஷ்ட சட்டதரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளருமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று சுழிபுரத்தில் போராட்டமொன்று நேற்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளை முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் என தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“வடகிழக்கெங்கும் தங்களின் கைவரிசையை காட்டிவருகின்ற சிங்கள பௌத்த பேரினவாதமும் பேரினவாதமும் கடைசியாக தற்போது வட்டுக்கோட்டையில் கை வைத்திருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் கைவைத்த இடம் பிழை.
வட்டுக்கோட்டை மண் எப்படிப்பட்டது என அனைவருக்கும் தெரியும்.
பல்வேறுபட்ட பிரகடனங்களை நிறைவேற்றியது எங்களது மண். தமிழீழ பிரகடனம் உட்பட பல்வேறு பிரகடனங்களை நிறைவேற்றியது இந்த மண்.
ஆனால், இந்த மண்ணில் மீண்டுமொருமுறை சிங்கள பௌத்த பேரினவாதம் சில பொய்யான கட்டுக் கதைகளை கூறிக்கொண்டு பறாளை முருகனையும் பிள்ளையாரையும் ஆக்கிரமிக்க வந்திருக்கின்றார்கள்.
சங்கமித்தை இலங்கைக்கு வந்து அரச மரத்தை நட்டுவைத்தாக அவர்கள் கூறியிருக்கின்றார்கள். சிங்கள பௌத்த பேரினவாதத்தவர்களும் ஒருதடவை மீண்டும் படிப்பிக்கவேண்டியுள்ளது.
உங்களுடைய மகாவம்சமும் தீபவம்சமும் பொய் என்பதை உங்களுக்கு மிள கற்பிக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
எங்கேயோ இருந்து வந்த சங்கமித்தை உங்கள் குடியை பரப்பினால் என்றால் நீங்கள் தான் வந்தேறிகுடிகள்! அவர்கள் இங்கு வரும்முன்னே தமிழர்களுக்கென்று ஒரு கலாச்சாரம் இருந்திருக்கின்றது.
பறாளைக்கு சங்கமித்தை வரவுமில்லை. அரசமரத்தை நடவுமில்லை என்பதை நாங்கள் உறுதியாக கூறுகின்றோம்.
தொல்லிண திணைக்களமும் சிங்கள பௌத்த பேரினவாதமும் எங்களுடைய மண்ணை ஆக்கிரமிக்க முற்பட்டால் எங்களுடைய மிகக் கடுமையாக எதிர்ப்பை மக்களை திரட்டி ஜனநாயக முறையில் முன்னெடுப்போம். என தெரிவித்தார்.

