
“13“ ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு சம்பந்தன் ஜனாதிபதிக்கு அழுத்தம்
13ஆவது திருத்தச்சட்டத்தில் அதிகாரப் பகிர்வை வழங்கும் செயல்முறையுடன் மாகாண சபைத் தேர்தலையும் உடனடியாக நடத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென வடக்கின் தமிழ் கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெற்ற சர்வக்கட்சி மாநாடு கருத்து வெளியிட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
”13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வை வழங்குவது குறித்தே ஜனாதிபதி இன்றைய மாநாட்டில் கருத்துகளை பகிர்ந்துக்கொண்டார்.
பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அதிகாரங்களை வழங்குவது குறித்து அவர் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால், நாங்கள் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த வேண்டுமென கூறினோம். மாகாண தேர்தல் பற்றி பேசுவதா அல்லது அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவதா என்று முடிவெடுங்கள் என ஜனாதிபதி பதிலளித்திருந்தார்.
அவரது கருத்து முரண்பாடான கருத்தாக இருந்தது. தேர்தலை நடத்துவதற்கும் அதிகாரப் பகிர்வு பற்றிய பேச்சுகளை தொடர்வதற்கும் உள்ள முரண்பாடு என்னவென எமக்கு தெரியவில்லை. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புப்பட்ட விடயமாகும். மாகாண சபைகள் இயங்கும் போதுதான் அவற்றின் அதிகாரங்கள் பற்றி பேச முடியுமென நாம் வலியுறுத்தினோம்.
மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென நாம் உறுதியாக ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்“ என்றார்.
இதேவேளை, சர்வக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதுடன், தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான இருப்பை அடிப்படையாக கொண்டு இந்த விடயத்தை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டுமெனவும் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

