
ஜே.வி.பி. ஆட்சிக்கு வர ஒருபோதும் இடமளியோம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் நாமும் அரசியலில் இருக்கும் வரை பாஷிசவாதக் கொள்கையுடைய, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய ஜே.வி.பி அல்லது அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சியை இந் நாட்டில் ஆட்சியில் அமர்த்திட ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என குருநாகல் மாவட்ட பொதுஜன பெரமுன கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தளை தொகுதி புனரமைப்பு பணி கிரிகல்பொத்த கிறிஸ்டல் ஹோட்டலில் இடம்பெற்ற போது விசேட பேச்சாளராக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
எமது கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸவின் எண்ணக்கருவில் உருவாகி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் இயங்கி வரும் எமது கட்சியை, ஜே.வி.பி போன்ற சில்லறை அரசியல் கட்சியினால் ஒரு போதும் வீழ்த்தி விடமுடியாது. எமது கட்சி, இலங்கை அரசியல் வரலாற்றில் சுமார் 3 அல்லது 4 வருட காலத்திற்குள் உருவாகி இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியையும் கைப்பற்றி 2015 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் வாக்குகளை பெற்று இந்நாட்டு சரித்திரத்தில் என்றுமில்லாதவாறு சாதனையை நிலைநாட்டி கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதியாக தெரிவு செய்துக் கொண்டோம்.
இரண்டரை ஆண்டு அவருடைய குறுகிய ஆட்சிக் காலத்தில் அவருக்கு ஆலோசனை வழங்கிய ஒரு சிலரின் தப்பான ஆலோசனைக் காரணமாகவும் இந்நாட்டில் என்றுமில்லாதவாறு வெளி நாடுகளின் கைக்கூலிகளாக செயல்பட்ட கோல்பேஸ் ஆர்ப்பாட்டக்காரர்களின் தொடர் ஆர்ப்பாட்டம் காரணமாகவும் இந்நாட்டில் ஜனாதிபதி ஒருவர் பதவி துறந்து போக வேண்டிய மிகவும் அவலட்சணமான நிகழ்வு ஏற்பட்டது .
அதை தொடர்ந்து இதே ஆர்ப்பாட காரர்களினால் எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடு உட்பட உடமைகள் சேதமாக்கப்பட்டு தீக்கரையாக பட்டு எமது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உயிரும் காவுக்கொள்ளப்பட்ட மிகவும் மோசமான நிகழ்வும் இடம்பெற்றது. இந்த இரத்தக் கறை படிந்த சம்பவம் முழு உலகத்திலும் எமது நாட்டை, மிகவும் கீழ் மட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. இதன் பின்னணியில் அனுர குமார திஸாநாக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி செயல்பட்டுள்ளது தெட்டத் தெளிவாகி உள்ளது.
கடந்த சில வாரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் பங்காளியான இராஜங்கனை தேரரை கைது செய்து அவரை விசாரணைக்கு உட்படுத்திய போது, அவரது வங்கி கணக்கில் 190 மில்லியன் ரூபா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிக்கு உட்பட கோல்பேஸ் ஆர்ப்பாட்டர்களுக்கு உலக பாஷிசவாத மற்றும் உலகளாவிய ரீதியில் பரந்து கிடக்கும் டயஸ் போரக்களின் மூலமாகவும் பல கோடி ரூபா, இந் நாட்டின் ஆட்சியை ஆட்டங்காண வைக்க அனுப்பிவைக்கப்பட்டது.
இராஜங்கனை பிக்குவின் வங்கிக் கணக்கில் 190 மில்லியன் ரூபா என்றால் கோல்பேஸ் ஆர்ப்பாட்டகாரர்களின் வங்கிக் கணக்குகளிலும் இதன் பின்னணியில் செயற்படும் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளிலும் எத்தனை மில்லியன் ரூபா இருக்கும் என்பதை கண்டறிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யார் இந்த தேசிய மக்கள் சக்தி என்றால், 1971 ஆம் ஆண்டு இந் நாட்டில் மாபெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தி களனி அலவுவ மற்றும் கடுகஸ்தோட்டை பாலங்கள் மூலமாக 12,000 இளைஞர்களின் உயிர்கள் காவுக் கொள்ளப்பட்டமைக்கும்,1987 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கிளர்ச்சிகளின் காரணமாக 60,000 உயிர்கள் இல்லாமல் போகக் காரணியாக இருந்தவர்கள்தான் இவர்கள் .
தற்போது இவர்கள் ஜனநாயகம் பற்றி முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்கள். இவர்களின் அரசியல், காலத்திற்கு காலம் வரும் ஆட்சியாளர்களை ஆதரிப்பதும் பின்னர் நிராகரிப்பதும் இவர்களுக்கு கைதேர்ந்த அரசியல் கலையாகும்.
எனவே இவ்வாறான அரசியல் மோசடிகாரர்களிடமிருந்து நாட்டு மக்கள் மிகவும் அவதானமாக நடந்துக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்

