
சாகரவின் தெரிவுக்குழுவுக்கு எதிர்ப்பைக் காட்டிவிட்டு வெளியேறிய சாணக்கியன்
நாடு வங்குரோத்தடைவதற்கான காரணத்தை கண்டறிவதற்காக பொதுஜன பெரமுன செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தெரிவுக்குழு முதற்தடவையாக செவ்வாய்க்கிழமை கூடியுள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளாத நிலையிலேயே இந்த குழு கூடியுள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சென்றிருந்த போதும், கூட்டம் ஆரம்பமான போது குழுவின் தலைவராக சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியேறி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் இன்றி சாகர காரியவசம் தலைமையில் அங்கு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நாடு வங்குரோத்தடைவதற்கான காரணம் தொடர்பில் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் குழு கூடி கலந்துரையாடவுள்ளதாகவும் குழுவின் தலைவர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதன்படி கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஏற்பட்ட பொருளதார நடவடிக்கை, அதன் பின்னரான அரசாங்க காலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை மற்றும் உலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நிலைமை ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பிலேயே இந்த கலந்துரையாடலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி சாட்சி விசாரணை, முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுன செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் குழவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி என்பன அந்த குழுவில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

