
சட்டத்தரணிகள் சங்கம் சுமந்திரன் எம்.பி.க்கு அச்சமடைகின்றதா?; எனக்கு எதிராக மட்டும் பாய்வது ஏன்? கேள்வி எழுப்புகிறார் சரத் வீரசேகர
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட பிரதிநிதி மொனிகா ஜின்டோவின் இலங்கை நீதித்துறை மீதான குற்றச்சாட்டுக்கள் ,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி சுமந்திரனின் உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான அச்சுறுத்தல் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் ஏன் வாய் திறக்கவில்லை.சுமந்திரனுக்கு சட்டத்தரணிகள் சங்கம் அச்சமடைகின்றதா என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் தலைவரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி. யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளதுடன் சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எமது மரபுரிமைகளை அழிக்கும் குண்டர்களுக்கு ஆதரவாக செயற்படுவதற்கு முன்னர் சட்டத்தரணிகள் ஒரு தடவைக்கு இரு தடவை சிந்திக்க வேண்டும். தொல்பொருள் சின்னங்களை மறுசீரமைக்கும் பணிகளில் ஈடுபட்ட தொல்பொருள் அதிகாரிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக பொய்யான வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா களவிஜயத்தை முன்னெடுத்த போது அங்கு சென்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கருத்து தெரிவிக்க முற்பட்ட வேளையில் அவரின் கருத்துக்களை அந்த இடத்தில் தெரிவிப்பதற்கு நீதிபதி அனுமதி மறுத்ததுடன் அவரை அங்கிருந்து வெளியேறுமாறும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் கடந்த 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் உரையாற்றிய சரத் வீரசேகர எம்.பி,”குருந்தூர் மலை விகாரையிலிருந்து எம்மை வெளியேறுமாறு உத்தரவிடும் அதிகாரம் முல்லைத்தீவு நீதிமன்ற தமிழ் நீதிபதிக்கு கிடையாது. குருந்தூர் மலை விகாரையின் தொல்பொருள் மரபுரிமை தொடர்பில் கேள்வி எழுப்பும் அதிகாரமும் இந்த தமிழ் நீதிபதிக்கு கிடையாது. அத்துடன் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை இந்த தமிழ் நீதிபதி மறந்துவிடக்கூடாது என அச்சுறுத்தும் தொனியில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சரத் வீரசேகர எம்.பி.க்கு எதிராக வடக்கு,கிழக்கு மாகாண சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பு மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செவ்வாய்க்கிழமை முன்னெடுத்த நிலையில் சரத் வீரசேகர எம்.பி. பாராளுமன்றத்தில் வெளியிட்ட கருத்து நாட்டின் மிகமுக்கிய அடிப்படைக் கட்டமைப்பான நீதிமன்றத்தின் மீதான மிகமோசமான தாக்குதல் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தது.
இவ்வாறான நிலையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் சரத் வீரசேகர எம்.பி. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு நேற்று வியாழக்கிழமை அனுப்பிய கடிதத்திலேயே இக் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார். அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எனக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சட்டத்தரணிகள் நடத்திய போராட்டத்துக்கு எவ்விதமான தேடலும் இல்லாமல் நீங்கள் ஆதரவளித்துள்ளீர்கள் என்றே உங்களின் அறிக்கையை கருதுகிறேன். நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட வேண்டும்,வெளிநபர்களின் தலையீடு இல்லாமல் நீதிமன்ற செயற்பாடுகள் சிறந்த முறையில் செயற்பட வேண்டும் என்பது மக்கள் அனைவரும் நன்கு அறிந்த விடயம்.சட்டத்தரணிகள் சங்கம் அதை புதிதாக விளக்க வேண்டிய தேவையில்லை.
அதேவேளை சட்டத்தரணிகள் சங்கத்திடம் எனக்கு சில கேள்விகள் உண்டு. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் உயர்நீதிமன்றம் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். ‘நாட்டின் உயர்நீதிமன்றம் கடிகார முள்ளைப்போல் இரு பக்கமும் சுழல்கிறது,அவர்களுக்கு அதனை தெளிவுபடுத்திக் கொள்ள அறிவு இல்லையானால் அவர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும்’ என்று அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார். சுமந்திரன் எம்.பி.யின் இந்தக்கருத்து தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் ஏன் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை.சுமந்திரன் எம்.பி உயர் நீதிமன்றத்துக்கு பாரதூரமான அச்சுறுத்தல் விடுக்கவில்லையா? எனவே சட்டத்தரணிகள் சங்கம் சுமந்திரன் எம்.பி.க்கு அச்சமடைகின்றதா?
அது மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட பிரதிநிதி மொனிகா ஜின்டோ இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பில் ஜெனிவாவுக்கு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பிலும் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு நினைவுப்படுத்த வேண்டும்.
எமது நீதிபதிகள் சேவையில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் அரச மற்றும் அரசியல் நியமனங்களை எதிர்பார்த்துள்ளார்கள்.அதனால் அவர்கள் எதிர்கால சேவைக்காக வழக்குகளின் போது அரசுக்கு சார்பாக தீர்ப்பு சொல்லும் தன்மை காணப்படுகிறது.ஒட்டுமொத்தமாக இலங்கையின் நீதிமன்ற சுயாதீனம் கட்டம் கட்டமாக இல்லாதொழிகிறது.சட்டத்தரணிகள் சங்கம் அரசியல் ரீதியில் பிளவு பட்டுள்ளது.அத்துடன் சட்டத்தரணிகள் சங்கம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமை பாரதூரமான பிரச்சினை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் விசேட பிரதிநிதி மொனிகா ஜின்டோ இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பில் பல குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.
நீதிமன்றத்தின் சுயாதீனம் மற்றும் கௌரவம் தொடர்பில் குரல் கொடுக்கும் சட்டத்தரணிகள் இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பில் மொனிகா ஜின்டோ முன்வைத்த கடுமையான, பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாய் திறக்கவில்லை. அக்குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கவுமில்லை,எதிர்ப்புத் தெரிவிக்கவுமில்லை.
ஆனால் இலங்கையின் நீதித்துறையின் கௌரவத்தை பாதுகாக்க தனிப்பட்ட முறையில் நான் 2014.07.18 ஆம் திகதி ஜெனிவாவுக்கு சென்று ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கூட்டத்தொடரில் இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பு குறித்து முன்வைக்கப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுக்கள்,கருத்துக்களை முழுமையாக நிராகரித்தேன். வன்மையாக கண்டித்தேன்.எமது நீதிமன்றத்தின் கௌரவத்தை அன்று நான் பாதுகாத்தேன்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை நான் நன்கு அறிவேன்.வடக்கில் எமது பௌத்த மரபுரிமைகள் அழிக்கப்படுவது குறித்து சட்டத்தரணிகள் சங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.அங்கு சென்று பார்வையிட வேண்டும். தொல்பொருள் சின்னங்களை மறுசீரமைக்கும் பணிகளில் ஈடுபட்ட தொல்பொருள் அதிகாரிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக பொய்யான வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதனால் தொல்பொருள் மறுசீரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எனவே எமது மரபுரிமைகளை அழிக்கும் குண்டர்களுக்கு ஆதரவாக செயற்படுவதற்கு முன்னர் சட்டத்தரணிகள் ஒரு தடவைக்கு இரு தடவை சிந்திக்க வேண்டும் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு உண்மையில் தேசப்பற்று இருக்குமானால் அவர்கள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

