
சுவீடனில் புனித குர்ஆன் எரிப்பு ஐ. நா.அமைதி காப்பது ஏன்?; ஜனாதிபதி ரணில் கேள்வி
சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை ஏன் அமைதி காக்கிறது? அந்த சபையினால் இதுகுறித்த அறிக்கையொன்று வெளியிடப்படாமல் இருப்பதன் நோக்கம் என்னவெனகேள்வி எழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் என மேற்கத்தேய நாடுகளிடம் கோரிக்கை விடுத்தார்.
இரத்தினபுரி புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை செவ்வாய்க்கிழமை பிற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறுகையில்,
அண்மையில் சல்வான் மோமிகா என்பவர் சுவீடனில் உள்ள துருக்கி தூதரகம் முன் குர்ஆனை எரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடினார். பொலிஸார் அதற்கு அனுமதி மறுத்தாலும் அது, கருத்து தெரிவிக்கும் உரிமை என்று உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.மதச் சுதந்திரத்தின் அடிப்படையிலே பொலிஸார் செயல்பட்டார்கள். அது கருத்து தெரிவிக்கும் உரிமை என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது. புனித குர்ஆன் எரிக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுவீடனுக்கு அனைத்து நாடுகளாலும் அழுத்தம்விடுக்கப்பட்டது.அனைவரும் கண்டனம் தெரிவித்தனர். இஸ்ரேல் கூட இதை செய்யக் கூடாத ஒன்று என்று கூறியது.
ஆனால் ஒரு சில மேற்கத்தேய அரசாங்கங்கள் இது கருத்துச் சுதந்திரம் என்றுகூறின. இதன் காரணமாக பாகிஸ்தான் தற்போது ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கு சென்றுள்ளது.இது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளதோடு 13ஆம்திகதி வியாழக்கிழமை (இன்று ) ஜெனீவாவில் இதுகுறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.
இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அது மேற்குலக நாடுகளுக்கு பின்னடைவாக அமையும் என சில அரச சார்பற்ற சர்வதேச நிறுவனங்கள் கூறுகின்றன. இது மேற்கு அல்லது கிழக்கு அல்லது வடக்கு அல்லது தெற்கு பிரச்சினை அல்ல. இது மதத்தைப் பின்பற்றும் உரிமை பற்றிய கேள்வியாகும்.
இதன்போது இலங்கை தொடர்பில் நான் எதுவும் பேசப்போவதில்லை. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் கைசாத்திடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பிலான விடயங்களை நாம் நிறைவேற்றவில்லை என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
ஐக்கிய நாடுகள் சபை ஏன் அமைதி காக்கிறது என்பதே எமது கேள்வியாகும். அந்த சபையினால் இதுகுறித்த அறிக்கையொன்று வெளியிடப்படாமல் இருப்பதன் நோக்கம் என்ன? எதற்காக வாக்கெடுப்பொன்று வரும் வரையில் காத்திருக்கவேண்டும்? வியாழக்கிழமை என்ன நடக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். அழுத்தங்கள் இன்றி அவர்கள் மேற்படி விடயத்தை கருத்துச் சுதந்திரம் என்றுசுட்டிக்காட்டினால் தெற்கு மற்றும் மேற்கத்தேய செல்வந்த நாடுகளுக்கு மத்தியில் முரண்பாடுகள்உருவாகும்.
அதேபோல், மேற்படி விடயத்தை, பின்பற்றும் உரிமை என அவர்கள் சுட்டிக்காட்டினால் அதற்கான வரையறைகளையும் குறிப்பிட வேண்டும்.
எனவே மனித உரிமைகள் பேரவை மக்களின் கடைப்பிடிக்கும் உரிமைகளை வரையறுக்கவேண்டுமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டும். இது ஒரு ஆரம்பம் மாத்திரமே.
எவ்வாறாயினும் தெற்கிலுள்ள நாடுகளின் தனித்துவமான பெறுமதிகள், தெற்கிலுள்ள நாடுகளின் விழுமியங்கள் மற்றும் உரிமைகளுக்கு மனித உரிமைகள் பேரவை மதிப்பளிக்க வேண்டியது அவசியமாகும். அதனைத் தடுப்பதற்கு அவசியமான அனைத்து முயற்சிகளையும் புறக்கணிக்குமாறு நான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அங்கத்தவர் என்ற வகையில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

