
புதிய மீன்பிடிச் சட்டங்கள்; வடக்கு மீனவர்கள் கேள்வி; சந்திக்கத் தயார் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்
இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய மீன்பிடிச் சட்டங்களால் வடபகுதி மீனவர்களின் பிரச்சனை தீர்க்கப்படுமா?அல்லது மேலும் பாதிக்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ள வடமாகாண கடத்தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் முகமட் ஆலம், புதிய சட்டங்கள் தொடர்பில் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாட விரும்புவதாகத் தெரிவித்தார்.
நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் பாடி விருந்தினர் விடுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் கடற் தொழில் அமைச்சர் மீன்பிடிச் சட்டங்களை திருத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டோம்.
ஏற்கனவே பல மீன்பிடிச் சட்டங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் அவை நடைமுறைப்படுத்தாது கிடப்பில் கிடக்கின்றது.ஆனால் தற்போது அமைச்சர், மீன் பிடிச் சட்டங்களை திருத்தவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் புதிய சட்டத்தால் வடபகுதி மீனவர்களின் பிரச்சனை தீர்க்கப்படுமா?அல்லது மேலும் பாதிக்கப்படுமா? என்பது தொடர்பில் ஆராய வேண்டும்.
தென் இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்பரப்பின் ஊடாக அரபிக் கடலில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட வழிவகை ஏற்படுத்தும் செயற்பாடுகள் திரை மறைவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் புதிய சட்ட திருத்தங்கள் தொடர்பில் எமக்குச் சந்தேகம் வருகிறது.
புதிய மீன்பிடிச் சட்டங்கள் தொடர்பில் என்னென்ன பிரிவுகள் திருத்தப்பட போகின்றன எந்தெந்த பிரிவுகள் நீக்கப்பட உள்ளன என்பது தொடர்பில் முன் கூட்டியே அமைச்சருடன் கலந்துரையாட விரும்புகிறோம்.
ஆகவே கடத்தொழில் அமைச்சர் வடமாகாண மீனவ சங்கங்களை அழைத்து சட்டத் திருத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை முன்வைத்தார்.
கலந்துரையாடத் தயார்
இதேவேளை திருத்தப்படவுள்ள புதிய மீன் பிடி சட்டங்கள் தொடர்பில் மீனவ சங்கங்கள் கலந்துரையாட விரும்பினால் அமைச்சில் அதற்குரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என கடற் தொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்,
இலங்கையில் உள்ள 15 கடற் தொழில் மாவட்டங்களிலும் புதிய மீன்பிடிச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.இதன் போது புதிய சட்டத்தில் மீனவர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில்,வருகை தரும் அதிகாரிகளுடன் தெளிவாகக் கலந்துரையாடலாம்.
இல்லாவிட்டால் அமைச்சில் கலந்துரையாட விரும்பினால் அதற்குரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.

