ஈழ தமிழர்களுக்கான தீர்வில் முஸ்லீம், சிங்கள, மலையக மக்களுக்கும் அதேயளவு பங்கு; யாழ் பல்கலைக்கழக அரசியல்துறை தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்

ஈழ தமிழர்களுக்கான தீர்வில் முஸ்லீம், சிங்கள, மலையக மக்களுக்கும் அதேயளவு பங்கு; யாழ் பல்கலைக்கழக அரசியல்துறை தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்

வடக்கு கிழக்கில் ஈழத் தமிழர்களுக்கான தீர்வு எவ்வளவு முதன்மை படுத்தப்படுகின்றதோ அதேயளவு முஸ்லீம், சிங்கள, மலையக மக்களுக்கும் உரித்துடைய பங்கினை இந்த வரைபில் உள்ளடக்கியுள்ளதுடன் இதன் ஊடாக ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான அங்கீகரிக்கப்பட்ட ஒரே தீர்வாக இந்த வரைவு உள்ளடக்கவேண்டும் என முன்னெடுத்துவருவதாக மக்கள் சிந்தனை மைய இணைத் தலைவரும் யாழ். பல்கலைக்கழக அரசியல்துறை தலைவருமான பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்தார்.

‘மக்கள் சிந்தனை மையம்’ தமிழ் மக்களின் தீர்வாக ஏற்படுத்தும் வரைபு தொடர்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள சிவில் அமைப்புக்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு ஈஸ் லகூன் ஹோட்டலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவர்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு கிழக்கை சார்ந்திருக்கக் கூடிய அரசில் தீர்வை நோக்கி பல தளத்தில் பல்வேறுபட்ட வரைபுகள் முதன்மை படுத்தப்பட்டன. இந்த வரைபுகள் அனைத்துமே அரசியல் கட்சிகளாலும் சில சிவில் அமைப்புக்களாலும் தொடக்கப்பட்டு கைவிடப்பட்டநிலை காணப்பட்டது.

இதனால் அந்த சூழலையும் இன்று இருக்க கூடிய சூழலையும் கருத்தில் கொண்டு ஒரு வரைபை தயார் செய்து அந்த வரைபினுடைய உள்ளடக்கம் அனைத்தையும் சிவில் அமைப்புக்களுடன் உரையாடி அதில் என்ன என்ன விடயங்களை இணைத்துக் கொள்ளுதல் அதனுடைய முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றி சிவில் அமைப்புக்களின் காத்திரமான பங்கு இந்த வரைபில் உள்ளடக்க வேண்டும் என்ற நோக்கோடு வடக்கு கிழக்கு சார்ந்த சிவில் அமைப்புக்களுடன் இரண்டு தினமும் சந்தித்து உரையாடியுள்ளோம்.

இந்த உரையாடலில் வடக்கிலும் கிழக்கில் உள்ள சிவில் அமைப்புக்கள் அதிகமான விடயங்களை தெரிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் உள்ளடக்கங்களை வலிமைப்படுத்துவதற்கும் ஆரோக்கியமான உரையாடலை செய்துள்ளனர்.

எனவே இந்த வரைபு ஈழத் தமிழர்களுடைய அரசியல் சார்ந்திருக்க கூடிய தீர்வாக அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புக்கள் புலம்பெயர்ந்த அமைப்புக்கள் அனைவருக்கும் இடையிலான பொதுவான ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒரே தீர்வாக இந்த விடயத்தை முதன்மை படுத்துவதற்கான நோக்கம் கொண்டு இந்த மக்கள் சிந்தனை மையம் ஏற்படுத்தியுள்ளது.

2001 ம் ஆண்டில் இருந்து மக்கள் சிந்தனை மையம் அரசியல் கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடி இந்த வரைபை வரைந்துவிட்டு அந்த வரைபை மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களிடம் தெளிவையும் உண்மை தன்மையையும் வலியுறுத்திவிட்டு மீண்டும் அரசியல் கட்சிகள் புலம்பெயர்ந்த அமைப்புக்கள் இந்த விடயம் தொடர்பாக உரையாடி ஒரு இறுதி முடிவை எடுத்த பிற்பாடு ஊடகங்கள் மூலம் அதனை அறிவிப்போம்.

இந்த வரைபினுடைய உள்ளடக்கம் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருக்கின்ற அல்லது இலங்கையினுடைய அரசியல் அமைப்பில் பொருத்தப்பாடு உடையது என கருதப்படக் கூடியதை உள்ளடக்கி இந்த வரைபை முதன்மை படுத்தியுள்ளது. கூட்டாச்சியும் கூட்டு சமஸ்டிக்குரியது.13 சார்ந்தும் உரையாடப்படுகின்றதுடன் இவை எல்லாவற்றையும் ஈழ தமிழர்களின் ஒரே வரைவாக முதன்மைபடுத்தும் நோக்கோடு வரையப்படும்.

இதன் ஊடாக ஈழதமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வை இந்த வரைவு உள்ளடக்க வேண்டும் என செயற்படுகின்றோம். இந்த தீர்வு வடிவமாக்கப்பட்ட பிற்பாடு எல்லா தரப்பும் அங்கீகரிக்கப்பட்ட வகையில் இந்த உரையாடல்களை செய்யவேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது.

இலங்கை அரசாக இருக்கலாம் அல்லது அரசுடன் பயணிக்கக் கூடிய பிற சக்திகள் மற்றும் புலம் பெயர்ந்த தளத்தில் உள்ள அமைப்புக்கள் உடன் உரையாடலை செய்து இந்த வரைவை முதன்மைபடுத்துவதுடன் 2009 பின்னர் இந்த மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய எண்ணங்களை அபிப்பிராயங்களையும் முதன்மைபடுத்தி பெருமளவுக்கு இந்த வரைபை முழுமைப்படுத்தியுள்ளனர்.

எனவே அதன் இசைவை நோக்கி தென் இலங்கை, அரசு மற்றும் இந்த விடயங்களுடன் தொடர்புபடுகின்ற அனைத்து சக்திகளும் கவனம் கொள்ள வேண்டும் என்பது இதனுடைய முக்கியமான நோக்கம்.

வடக்கு கிழக்கில் இருக்கின்ற சிங்கள மக்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகள் வாழ்வியல் இருப்பு பாதுகாப்பு மற்றும் அவர்கள் தேசிய தனித்துவங்களை பேணக்கூடிய ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்படுகின்ற ஒரு சூழல் போன்றவை இந்த வரைபின் உள்ளடக்கமாக அமைந்திருக்கின்றது

அதனுடைய பிரதிபலிப்பு முஸ்லீம்கள் அல்லது சிங்கள மக்கள் சார்ந்து முதன்மைபடுத்தப்படல் என்பது இந்த வரைபில் செயல்பூர்வமான வடிவத்துக்கு கொண்டுவரும் போது அது தொடர்பான முழுமையாக காணப்படும். இதில் தேசியங்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு உரித்துடைய அதாவது ஈழத் தமிழர்களுக்கு முதன்மை படுத்தப்படுகின்ற அதே அளவு முதன்மை முஸ்லீம் ,சிங்கள, மலையக மக்களுக்கும் உரித்துடைய பங்கினை இந்த வரைபு தனக்குள்ளே உள்ளடக்கியுள்ளது.

ஏற்கனவே முன்வைக்கப்பட் அனைத்தும் அந்தந்த தரப்புக்கள் தமது தேவைகளுக்கும் நலனுக்குமாக கட்டமைக்கப்பட்டு வரையப்பட்டதாக காணப்படுகின்றது சில அமைப்புக்கள் வரைந்த வரைபுகளை தொடர்ச்சியாக பேணவில்லை அல்லது முதன்மைப்படுத்தவில்லை அல்லது மக்களுடன் தொடர்ந்து உரையாடல் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது.

எனவே அதிலிருந்து விலகி மக்களுடனும் சிவில் அமைப்புக்களுடனும் சேர்ந்து இந்த விடயத்தை முன்னெடுக்கின்ற எண்ணப்பாடு எங்களிடம் காணப்படுகின்றது.

அத்துடன் இந்த வரைபின் உள்ளடக்கம் அதிதிமானது ஒரு கூட்டு சமஸ்டி குறித்து 3 விடயங்களை முதன்மைப்படுத்தியுள்ளோம். குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்த வரைபை முழுமைப்படுத்தி அதற்கு கீழ் ஒரு உரையாடலை செய்வது, அது சாத்தியப்படாதபோது ஒரு கூட்டு சமஸ்டிக்குரிய வலிமை என்பதை முதன்மை படுத்தியுள்ளோம். அத்தகைய அம்சங்களை செயல்படுத்தும் சூழல் சாத்தியப்படாத போது ஈழதமிழர்கள் தங்களுடைய சுயநிர்ணயம் சார்ந்த விடயங்களில் சில தீர்மானங்களை எடுக்க சந்தர்ப்பம் வருகின்றபோது ஒரு பொது வாக்கெடுப்பை நோக்கி போவதற்கான எண்ணத்தையும் இந்த வரைபு இந்த முதன்மையான அம்சத்தை கொள்ளத் திட்டமிட்டுள்ளது

பெருமளவிற்கு மக்கள் சார்ந்துள்ள பிரச்சனைகளுக்குரிய தீர்வை, அவர்கள் அகிம்சை ரீதியாக ஜனநாயக மரபுகளுக்குட்பட்ட ரீதியில் கோரிக்கைகளையும் எண்ணங்களையும் முதன்மைபடுத்துகின்றனர். இது தொடர்பான சமஸ்டி அல்லது கூட்டு சமஸ்டி சார்ந்தவை சாத்தியமற்றுப் போகும் போது பொதுவாக்கெடுப்புக்கு செல்லவேண்டியது என இந்த வரைபில் உள்ளடக்கியுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )