
தமிழர் வரலாற்றில் இன்று கறுப்பு நாள்
முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ஆயுதப் போரின் இறுதிக் கட்டத்தில் தமிழ் மக்கள் கொத்துக்-கொத்தாய் ஈவிரக்கமின்ற படுகொலை செய்யப்பட்ட துயர் தோய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது.
மே-18 பெருந்துயர் நாளின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் இடம்பெறுகிறது.
நினைவேந்தல் ஏற்பாடுகள் அனைத்தும் முன்னெடுப்பட்டுள்ள நிலையில் அச்சமின்றி அனைவரையும் நினைவேந்தலில் கலந்துகொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை ஏதும் இல்லை என ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள போதும், மக்களை அச்சுறுத்தி நிகழ்வுக்கு வருவதை தடுக்கும் வகையில் படைத் தரப்பினரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்குள் இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு நினைவேந்தல் வளாகத்தை சூழ பொலிசார் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். நினைவேந்தல் வளாகத்துக்குள் செல்வோர் குறித்த பதிவுகளை செய்து பொலிஸார் அடிவடியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனைவிட வடக்கு – கிழக்கில் நேற்று முதலே வீதிகளில் வழமைக்கு மாறாக இராணுவத்தினர், பொலிஸார் களமிறக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி கிழக்கில் அம்பாறையில் இருந்தும் வடக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் முள்ளிவாய்க்கால் நோக்கி போரணிகள் ஆரம்பமாகி முள்ளிவாய்க்கால் இன்று நினைவேந்தல் முற்றத்தை அடையவுள்ளன. அத்துடன், வழக்கு- கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் இன்று ஒன்றுகூடவுள்ளனர்.
இந்நிலையில் அனைவரும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று ஒன்றுகூடியதும் முற்பகல் 10.30 மணிக்கு ஈகைச் சுடரேற்றி, மலர் மாலை தூவி படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.