
ஐ.தே.க.வில் இணைய பலரும் பெரும் ஆர்வம்
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகியவர்கள்,ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிகொத்த தலைமையகம் பரபரப்பாக காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போது இணைந்து வருபவர்களில் ஏனைய அரசியல் கட்சிகளின் அமைப்பாளர்கள், பிரதேச தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளடங்குவதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
80 தொகுதிகள் என்ற இலக்கை அடைய வேண்டுமென கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள நிலையில், அந்த இலக்கை அடைவதற்காக கட்சி நிர்வாகிகள் குழு கடுமையாக உழைத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களை அடுத்த தேர்தல் வரை காப்பாற்றுவதற்கான திட்டத்தை தயாரிக்கும் பணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையிலேயே ஐ.தே.க. பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

