
மேல் மாகாணத்தில் 24 மணி நேரத்தினுள் மூவர் சுட்டுக்கொலை
மேல் மாகாணத்தில் 24 மணி நேரத்தினுள் இடம்பெற்ற மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மூவர் பலியாகியுள்ளனர்.
நேற்று புதன்கிழமை காலை கொஸ்கொட ஹித்தருவா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகத் தலைவர் கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினரான கொஸ்கொட ரன் என்பவரே உயிரிழந்துள்ளதாகவும்
அவர் வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கொட்டாவ, தர்மபால வித்தியாலயத்துக்கு முன்பாக நேற்று காலை இடம்பெற்ற இன்னொரு துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழந்தவர் மத்தேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனவும் கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை ஹோமாகம, மஹா கட்டுவன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஹோமாகம மஹா கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் இரவு 8 மணியளவில் அவர் தனது வீட்டின் முன் தொலைபேசி அழைப்பில் இருந்தபோது , காரில் வந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

