
குருந்தூர் மலையை பாதுகாப்பது தமிழ்மக்களின் கடமை,பொறுப்பு
தமிழ்மக்களின் சரித்திரம் தான் குருந்தூர் மலை. அதனைப் பாதுகாக்க வேண்டியது தமிழ்மக்களின் கடமையும், பொறுப்பும்.வெடுக்குநாறிமலை, தையிட்டி போன்ற பல பிரதேசங்களையும் சிங்களமயமாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய இனவாதத்தைத் தான் நாங்கள் எதிர்க்கின்றோம். இதனைத் தொடர்ந்தும் நாங்கள் எதிர்ப்போம்
எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலை உள்ளிட்ட வடக்கில் பெளத்த- சிங்களவர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ள அத்தனை விடயங்களுக்கும் ஜனாதிபதி விரைந்து தீர்வு காண வேண்டும். இல்லையேல் பெளத்த- சிங்கள மக்களின் பேரெழுச்சியை எவராலும் கட்டுப்படுத்த முடியாதென முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், எம்.பியுமான சரத் வீரகேசர தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் வினவிய போதே இவ்வாறு தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. மேலும் கூறுகையில்,
சட்டத்தை அறியாத, சட்டமென்றால் என்னவென்று தெரியாத, சட்டத்திற்கு மாறாகத் தான் விரும்பிய இனவாத மூளைக்காகச் செய்வதை நாங்கள் எதிர்க்கின்ற போது அதனை வன்முறை மூலமாக அழிக்க வேண்டுமென்ற மனநிலையோடு செயற்படும் சரத் வீரசேகர போன்றவர்கள் யுத்தகாலத்தில் ஒரு இனப்படுகொலையைச் செய்து முடித்துள்ளார்கள்
வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ்மக்கள் சிங்கள மக்களுக்கு எதிராகவோ, அவர்களுக்குத் தீமை வர வேண்டுமென்றோ எந்தச் சந்தர்ப்பத்திலும் செயற்பட்டது கிடையாது. தமிழ்மக்களின் நலன்கள் இனவாத ரீதியிலான முடிவுகள் ஊடாக திட்டமிட்டுப் பாதிக்கப்படுகின்ற போது, தமிழ்த்தேசத்தின் அடையாளம் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படும் போது, தமிழ்த்தேசத்தின் இருப்பு ஒரு இன அழிப்பிற்கோ, இனப் படுகொலைக்கோ உள்ளாக்கப்படும் போது தான் தமிழ்மக்கள் அவற்றை எதிர்த்துச் செயற்பட்டு வருகிறார்கள்.
குருந்தூர் மலையில் தொல்பொருள் சார் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் காணப்படுகின்றமை தமிழ்மக்கள் நீண்டகாலமாக அறிந்த விடயம். எனினும், அங்கு காணப்படுகின்ற தொல்பொருள் அடையாளங்களை அழிப்பதற்குத் தமிழ்மக்கள் எக் காலத்திலும் முயலவில்லை. மாறாகப் பல நூறு வருடங்களுக்கும் மேலாகத் தமிழ்மக்களால் குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்டு வந்த பாரம்பரிய சைவ வழிபாடுகளை இல்லாமல் செய்து, அழித்துக் குருந்தூர்மலை திடீரெனச் சுற்றிவளைக்கப்பட்டு, இராணுவம் குவிக்கப்பட்டு அங்குள்ள தொல்பொருட்கள் தொடர்பில் எந்தவித ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாமலேயே பெளத்த விகாரை அமைத்திருப்பது தமிழ்மக்களுக்குப் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்மக்களில் குறிப்பிட்டளவான மக்கள் ஒரு காலத்தில் தமிழ்ப் பெளத்தர்களாக இருந்துள்ளதாகச் சொல்லப்படும் நிலையில் தமிழ்மக்களின் சரித்திரம் தான் குருந்தூர் மலை.
அதனைப் பாதுகாக்க வேண்டியது தமிழ்மக்களின் கடமையும், பொறுப்புமாகும்.
எந்தவொரு பெளத்தரும் வாழாத குருந்தூர் மலையில் 1933 ஆம் ஆண்டில் தொல்பொருளுக்கு அடையாளமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஏறத்தாழ 72 ஏக்கருக்கும் மேலதிகமாகத் தமிழ்மக்களுக்குச் சொந்தமான சுமார் 230 ஏக்கர் நிலங்களைத் தற்போதைய மிகவும் பொருளாதார நெருக்கடி மிகுந்த சூழலில் பறித்து அதில் திட்டமிட்ட வகையிலான சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஏனைய தமிழ்ப் பிரதேசங்களான வெடுக்குநாறிமலை, தையிட்டி போன்ற பல பிரதேசங்களையும் சிங்களமயமாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய இனவாதத்தைத் தான் நாங்கள் எதிர்க்கின்றோம். இதனைத் தொடர்ந்தும் நாங்கள் எதிர்ப்போம் .
தமிழ்மக்களின் நலன்களைத் திட்டமிட்டு அழிக்கும் வகையில் அரசு செயற்படும் ஒவ்வொரு தடவையும் தமிழ்மக்கள் அதனை நிச்சயமாக எதிர்த்தே ஆக வேண்டும். சிங்கள ஆக்கிரமிப்புக்கெதிராகப் போராடும் தமிழ்மக்கள் மீது சிங்கள இனவாதிகள் வன்முறையைக் கட்டவிழ்க்க முற்பட்டால் உலகம் அதனைக் கருத்தில் கொள்ளும் என்றார்.

