குருந்தூர்மலையில் தமிழர்களைக் குடியமர்த்தப்போவதில்லை; ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு

குருந்தூர்மலையில் தமிழர்களைக் குடியமர்த்தப்போவதில்லை; ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு

குருந்தூர்மலையில் தமிழர்களை குடியேற்றப்போவதாக கூறுகிறார்கள். அரசாங்கத்துக்கு சொந்தமான இடங்களில் தமிழர்களையோ, சிங்களவர்களையோ அல்லது முஸ்லிம்களையோ நான் குடியமர்த்தப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலும் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலின்போது, குருந்தூர்மலையில் தமிழ் பௌத்த விஹாரை இருந்ததாக ஜனாதிபதி கூறியிருந்ததோடு, குருந்தூர் விஹாரைக்கு எனக்கூறி காணிகளை ஆக்கிரமிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர், பதவியிலிருந்து விலகியிருந்த நிலையில், தென்னிலங்கை அரசியல்வாதிகளும் கடும்போக்காளர்களும் இதனை கையில் எடுத்து பூதாகரமாக்கியிருந்தனர்.

இதற்கிடையில். ஜனாதிபதிக்கு அவசர அவசரமாக கடிதம் ஒன்றை எழுதிய எல்லாவல மேதானந்த தேரர், “குருந்தி விகாரைக்கு சொந்தமில்லாத காணிகளை பொதுமக்களிடம் கையளிப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சொல்கிறார்கள்.

குருந்தி விஹாரையைச் சுற்றிலும் பல்வேறு பௌத்த விஹாரைகளின் இடிபாடுகள் பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. எனவே, இந்த காணிகளை பகிர்ந்தளிப்பது ஏற்புடையதல்ல” என தெரிவித்திருந்தார்.

ஹோமாகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி, எல்லாவல மேதானந்த தேரரின் கடிதத்துக்கு, ”குருந்தூர்மலையில் நான் தமிழர்களை மட்டுமல்ல இந்நாட்டில் உள்ள எவரையும் குடியமர்த்தப்போவதில்லை.” என பதிலளித்துள்ளார்.

திருகோணமலை – திரியாயவை இடித்துவிட்டு கட்டடங்களை நிர்மாணிக்கப்போவதாகவும் சிலர் சத்தமிடுகிறார்கள். 2018ஆம் ஆண்டு பாராளுமன்றக் குழு இது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

இவற்றை எல்லாம் ஆராய்ந்தால் இதுபோன்ற இனவாதப் பிரச்சினைகள் ஏற்படாது எனவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.

”குருந்தூர்மலை காணி விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிட குழு ஒன்றை நியமித்திருக்கிறேன். என்னால் இதனை தேட முடியாது என்றால், என்னால் இதற்கு தீர்வு வழங்க முடியாது என்றால் சாதாரண பொதுமக்களுக்கு எவ்வாறு இது சாத்தியம்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )