
சஜித் ,அனுரகுமாரவுடன் இணைந்து ரணிலை வீழ்த்த பாரிய கூட்டணி; அனைத்து எதிர்கட்சிகளுடனும் விரைவில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எதேச்சதிகார அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காகவும் எதிர்க்கட்சிகளின் பரந்துபட்ட அரசியல் கூட்டணியை கட்டியெழுப்புவதற்காகவும் அனைத்து எதிர்கட்சிகளுடனும் விரைவில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கம்புருபிட்டியவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், இந்த உணர்வற்ற எதேச்சதிகார ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை தோற்கடிக்க, எதிர்க்கட்சிகளின் பரந்த அரசியல் முன்னணி அல்லது கூட்டணி கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இதன் ஆரம்பமாக, எதிர்க்கட்சிகளின் முக்கிய நீரோட்டங்களான ஐக்கிய மக்கள் சக்தி(சஜித் பிரேமதாஸ),தேசிய மக்கள் சக்தி(அனுரகுமார திஸாநாயக்க)மற்றும் பெரிய மற்றும் சிறிய அனைத்து எதிர்க்கட்சிகளுடன் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்கும் பொதுவான இலக்கை நிறைவேற்ற அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பாலம் கட்டுவதற்கு முன்னுரிமை அளிப்பதே எங்கள் நோக்கம். எனவே, எதிர்க்கட்சிகளுக்கு இடையே பொதுவான உடன்பாட்டை உருவாக்குவதே எங்களது அணுகுமுறை. அனைவரும் தங்கள் கட்சி மற்றும் தனிப்பட்ட இலட்சியங்களைப் பற்றி சிந்திப்பதை விட ஒரு பொதுவான திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும். இதுவே இந்நாட்டு மக்களுக்கு வழங்கக்கூடிய மிகப்பெரிய நீதியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் தேசிய மக்கள் சக்தியுடன் இணைய முடியுமா என்பதும் அவர்களுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க முடியுமா எனத் தெரியவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

