
எனது கைது சட்டவிரோதமானது எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்
நீதிமன்ற பிடியாணை எதுவுமின்றிஎன்னைக் கைது செய்த பொலிஸார் என்னைக் கைது செய்ததற்கான ரசீதையும் எனது குடும்பத்துக்கு வழங்க மறுத்து விட்டனர். பொலிஸார் என்னை சட்டவிரோதமான முறையிலேயே கைது செய்தனர். பொலிஸ் பேச்சாளர் என்னைப் பற்றி ஊடகங்களுக்கு பல தவறான அறிக்கைகளை அளித்து வருகிறார்.எனவே எனது பாதுகாப்பிற்கு ஏற்றதாக கருதும் அனைத்து நடவடிக்கைகளையும் சபாநாயகர் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை முன்வைத்த, வடமராட்சி கிழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவம் ,அதன் தொடர்ச்சியாக தான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை தொடர்பான சிறப்புரிமை மீறல் பிரச்சினையிலேயே இவ்வாறு வலியுறுத்தினார் .
தனது சிறப்புரிமை மீறல் பிரச்சினையில், கடந்த வெள்ளிக்கிழமை வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் தன் மீது மேற்கொள்ளப்பட்ட புலனாய்வுத் துறையினரின் தாக்குதல்,துப்பாக்கி முனையிலான அச்சுறுத்தல் உள்ளிட்டவை தொடர்பில் விலாவாரியாக விபரித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. மேலும் கூறுகையில்,
மருதங்கேணி சம்பவத்தை தொடர்ந்து ஜூன் 5ஆம் திகதி மாலை சுமார் 3.30 மணியளவில் மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி என்னைத் தொடர்பு கொண்டார். ஜூன் 2ஆம் திகதி நடந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்கு எனது ஒத்துழைப்பை கோரினார். அப்போது நான், பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக கொழும்பு செல்லும் வழியில் இருந்தேன். இதனால் ஜுன் 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் திரும்பி, அதனை செய்வதாக கூறினேன்.
இதேவேளை சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.அதன்பிறகு, சபாநாயகருடன் உடனடியாக தொடர்பு கொண்டேன். அப்போது சபாநாயகர் வெளிநாட்டில் இருந்தார். பதில் வராததால் வட்ஸ் அப் செய்தியை அனுப்பினேன்.
பின்னர் நான் பிரதி சபாநாயகருடன் தொடர்பு கொண்டு விடயத்தை கூறினேன். அப்போது பாராளுமன்ற அமர்வில் நான் கலந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கினேன்.
இதன்படி ஜூன் 12 ஆம் திகதி மீண்டும் யாழ்ப்பாணம் வந்து வாக்குமூலம் வழங்குவதாக கூறியிருந்தேன். இந்த உறுதிமொழிகள் இருந்த போதிலும் மருதங்கேணி பொலிஸார் கொள்ளுப்பிட்டி பொலிஸாரின் ஊடாக ஜூன் 6 ஆம் திகதி மதியம் 1 மணியளவில் என்னிடம் எழுத்து பூர்வ அறிவித்தலை அனுப்பினர். ஜூன் 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் என்னை ஆஜராக வேண்டும் என்றனர். இந்தத் தகவல் சிங்களத்தில் இருந்ததால் அதனை ஏற்கவில்லை.பின்னர் ஜூன் 6 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் எனது கொழும்பு வீட்டுக்கு வந்தனர்.அந்த அறிவித்தலை தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புடன் வழங்கினர்.
இவ்வாறான நிலைமையில் ஜூன் 8 ஆம் திகதி காலை என்னை கைது செய்ய வந்தனர். திடீரென என்னை கைது செய்ய ஏன் அவசரம் என்று கேட்டேன். உடனடியாக சபாநாயகரை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டேன். ஜூன் 12ஆம் திகதி வாக்குமூலத்தை பதிவு செய்யலாம் என்பதனை ஏற்றுக்கொண்டவர்கள் திடீரென என்னை கைது செய்து மருதங்கேணிக்கு அழைத்துச் செல்ல விரும்பினர்.
பிடியாணை எதுவும் இல்லை. இவ்வாறான நிலைமையில் கைது செய்வது எனது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறுவதாகும். பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்காது என்னைக் கைது செய்தனர். இது தொடர்பில் சபாநாயகரிடம் பேசி தொலைபேசியை வைத்தவுடன், என்னைக் கைது செய்தனர்.
அப்போது அவர்களிடம் பிடியாணை உள்ளதா என்று கேட்டேன். ஏதும் இல்லை என்றே கூறினர். மேலும் என்னை கைது செய்வதற்கான காரணம் உள்ளிட்டவை அடங்கிய ரசீதை எனது குடும்பத்தினரிடம் வழங்குமாறு கேட்டேன். அதனையும் வழங்கவில்லை. மாறாக நான் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டேன். கைது செய்யப்பட்டதற்கான ரசீது
பின்னர் கொள்ளுப்பட்டி பொலிஸில் தனிப்பட்ட முறையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது
என்னிடம் ஒப்படைப்பதில் அர்த்தமில்லை. இதை எனது குடும்பத்தினரிடமோ அல்லது எனது வீட்டில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும்.நான் இருக்கும் இடம் தெரியாவிட்டால் என்னை கைது செய்ததற்கான ஆதாரம் வேண்டும் என்றேன். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர்
பின்னர் நான் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன், அங்கு எனது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு எனக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டது.
இவ்வாறான நிலைமையில் பொலிஸ் பேச்சாளர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு பல தவறான அறிக்கைகளை அளித்து வருகிறார். இந்த அறிக்கைகள் அனைத்தும் பொலிஸ் விசாரணையின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக வெளியிடப்பட்டுள்ளன.
நேற்று வரை இந்த சம்பவம் தொடர்பாக எனது வாக்குமூலம் பெறப்படவில்லை. பல சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் பொலிஸார் கூறுவதை வெளியிட்டுள்ளன.
ஜூன் 2 ஆம் திகதி நடந்த சம்பவத்தில் பக்கச் சார்பாக செய்திகளை வெளியிட்டது அவை அப்பட்டமான தவறானவை.நான் தலைமறைவாகி விட்டேன் என்றும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.நான் அல்லது என் குடும்பம் எனது தந்தை படுகொலை செய்யப்பட்டும், வெள்ளை வான் கடத்தலின் போதும் ஓடிப்போகவில்லை.
என்னுடைய மற்றும் எனது மக்களின் நலனுக்காக எல்லாவற்றையும் அம்பலப்படுத்த வேண்டும்.இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்த வேண்டும்.பொலிஸ் திணைக்களம் ஏற்கனவே எனக்கு எதிராக பாதகமான தீர்மானங்களை எடுத்துள்ளது.
அவர்களால் எனது உரிமைகள் மீறப்பட்டுள்ளன. அதன் மூலம் பொலிஸ் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது.
இந்நிலையில் எனது பாதுகாப்பிற்கு ஏற்றதாக கருதும் அனைத்து நடவடிக்கைகளையும் சபாநாயகர் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

