கொழும்பில் நேற்றுக் காலை கைதான கஜேந்திரகுமார் எம்.பி. பிணையில் விடுதலை

கொழும்பில் நேற்றுக் காலை கைதான கஜேந்திரகுமார் எம்.பி. பிணையில் விடுதலை

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்

முன்னதாக நேற்றுக் காலை 6.30 மணியளவில், கஜேந்திரகுமாரைக் கைதுசெய்வதற்காக, பொலிஸார் கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்திற்கு சென்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பில், சபாநாயகருக்கு அறிவித்ததாகவும், அது தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு தாம் அறிவிப்பதாகவும் சபாநாயகர் கூறியதாகவும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்தச் சந்தர்ப்பத்தில், தெரிவித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும், காலை 8.15 மணியளவில் பொலிஸார் அவரைக் கைதுசெய்து, பின்னர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்வதற்காக அங்கு அழைத்துச் சென்றனர்.

மருதங்கேணி பகுதியில் , பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், அவர் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், இன்று முற்பகல் 10 மணிக்கு, மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நேற்று முன்தினம் மதியம் கொள்ளுப்பிட்டி பொலிசாரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

வடமராட்சி கிழக்குப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த வேளையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை செவ்வாய்க்கிழமை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரியினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாவதால் அதில் பங்கேற்பதற்காக நான் கொழும்பு சென்று கொண்டிருக்கின்றேன். அத்துடன் உங்கள் அழைப்பு தொடர்பில் சபாநாயகருடனும் கலந்து பேசவேண்டியுள்ளது. அதனால் இந்த வார பாராளுமன்ற அமர்வை முடித்த பின்னர் நான் அடுத்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் திரும்பவேன் . அப்போது பொலிஸ் நிலையம் வருகின்றேன் என பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொழும்பில் உள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சென்ற கொள்ளுப்பிட்டி பொலிஸார் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகும் வரை நாட்டை விட்டு வெளியேற கிளிநொச்சி நீதவான் நீதிமன்றினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில், நேற்றைய தினம், பாராளுமன்றில், சிறப்புரிமை பிரச்சினையை முன்வைக்க கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திட்டமிட்டிருந்தார்.

இது குறித்து, சபாநாயகருக்கு நேற்று முன்தினம் மாலை அறியப்படுத்தி இருந்ததாகவும், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே நேற்றுக் காலை அவர் பொலிசாரால் கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டு கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இவ்வாறான நிலையில் மாலை 5 மணியளவில் கிளிநொச்சி நீதவான்

நீதிமன்றத்தில் அவர் பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கஜேந்திரகுமார் சார்பில் சட்டத்தரணிகளான க.சுகாஸ், கந்தசாமி மகிந்தன், நடராசா காண்டீபன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )