எல்லா நாளும் பெண்கள் நாளே!!

எல்லா நாளும் பெண்கள் நாளே!!

 -சித்ரா-

ஆடிப்பெருக்கு என்றொரு பழைய தமிழ்த் திரைப்படம். அதிலே, பள்ளி மாணவ மாணவியர் சிலர். பெண்கள் உயர்ந்தவர்களா, ஆண்கள் உயர்ந்தவர்களா என்று தமக்கிடையில் தர்க்கிப்பது போன்ற ஒரு பாடல் காட்சி வரும்.

இரண்டு தரப்பினரும் பல்வேறு புராண, இதிகாச உதாரணங்கள் மூலம் தத்தமது தரப்பை நியாயப்படுத்துவது போல பாடல் நகர்ந்து செல்லும். கடைசியில் கதாநாயகன்,
“யேசு, காந்தி மகான், புத்தரைப் போல இதுவரை பெண்கள் இருந்ததுண்டா?” என்று பாடிவிட்டு, கைகள் கட்டி இறுமாப்புடன் பெண்கள் பக்கம் பார்த்தபடி நிற்பார். ‘எந்தப் பதிலும் இனிப் பெண்களால் சொல்ல இயலாது என்பது போல’.
கதாநாயகி,
“யேசு, காந்தி மகான் புத்தரையும் ஈன்றது எங்கள் தாய்க்குலமே!!” என்று அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல சொல்வதாய் பாடல் நிறைவடையும்.

“பெருமைகள் எல்லாம் பெண்ணாலே…. இதை அறியணும் உலகம் முன்னாலே” என்று, அன்றும், இன்றும், இனி என்றும் இதுவே யார்த்தம் என்பதை வலியுறுத்திச் சொல்வோம்.

சம காலத்தில், பெண்கள் சார்ந்த பல பரிணாமங்களில் இந்த உண்மையை நாம் கண்கூடாகக் காண முடியும். இன்று உலகம் முழுவதிலும், குறிப்பாகப் புலம் பெயர் நாடுகளில் ஏறத்தாள எல்லாப் பெண்களுமே உழைத்துப் பொருள் தேட வேண்டிய தேவை இருக்கிறது. இதனால், வீட்டில் வைத்துப் பராமரிக்க வேண்டிய வயசுக் குழந்தைகளுக்கான பகல் நேரப் பராமரிப்பு நிலையங்கள் எல்லா இடங்களிலும் உருவாகியுள்ளன. தாய்மார் வேலைக்குப் போகும் நேரங்களில் அவர்களுடைய குழந்தைகள் அங்கே பராமரிக்கப் படுகின்றனர். ஆச்சரியம் என்னவென்றால், இப்படிப்பட்ட பராமரிப்பு நிலையங்களில் பணிபுரிபவர்கள் எல்லோருமே பெண்களாக இருப்பதுதான். ஒரு ஆண் பணியாளரைக் காண்பது அபூர்வம். இதன் காரணம் தான் என்ன?

விடை மிகவும் சுலபமானது…. தாய்மை உணர்ச்சியோடு ஒரு குழந்தையைப் பொறுப்புடன் பராமரிக்கக்கூடிய ஆற்றல் அல்லது தகைமை பெண்களுக்கு மட்டுமே உரிய பண்பு என்பதுடன் எந்த ஒரு ஆணிடத்திலும் அது காணப்படுவதில்லை என்பது தான் அது. இதைவிட, …. பராமரிப்பு நிலையங்களில் பிள்ளைகளைக் கொண்டுவந்து விடுவது, பின்னர் வந்து அவர்களைக் கூட்டிச் செல்வது போன்ற வேலைகளையும் பெருமளவில் பெண்கள் தான் செய்கிறார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.

இவற்றுடன், குடும்பத்தினருக்கான அன்றாட உணவைத் தயாரிப்பதும் பெரும்பாலும் பெண்களின் பங்காகவே இருக்கிறது. மொத்தத்தில், பெண் என்ற அச்சாணியைக் கொண்டே ஒரு குடும்பத் தேர் நகர்கின்றது என்ற வாழ்வியல் உண்மையை யாரும் மறுக்க முடியாது!!

‘ஒற்றைத் தாய்’ – Single Mother. இந்த சொற்பதம் இன்றைய காலகட்டத்தில் இயல்பான ஒன்றாகி விட்டது. விதவையாக்கப்பட்டு, விவாகரத்து செய்யப்பட்டு, கணவனால் கைவிடப்பட்டு……. என, இது போன்ற வெவ்வேறு காரணிகளால் குடும்ப பாரத்தைத் தனியாளாக நின்று சுமக்கும் நிர்ப்பந்தம் பெண்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. குறிப்பாக, எமது தாய் நிலத்தில், கொடிய போரின் விளைவாக ஆயிரமாயிரம் பெண்கள் இன்று ‘ஒற்றைத் தாய்’ நிலைக்கு ஆளாகி, வலியும் வேதனையும் மிகுந்த ஒரு வாழ்க்கைச் சூழலில் குடும்ப பாரம் சுமந்து, தம் பிள்ளைகளை வளர்த்தெடுக்கப் படாத பாடு படுகின்ற கதைகள் பலவற்றை நாமறிகிறோம்.

இதைப் போன்று, ‘ஒற்றைத் தந்தை’ – Single Father என்ற வார்த்தையை மிகமிக அரிதாகவே கேட்க முடிகிறது. என்ன காரணம்? கஷ்டமோ நஷ்டமோ – எத்தனை பிள்ளைகள் என்றாலும் தனி ஆளாக குடும்ப பாரத்தைச் சுமக்கும் தன்னலமற்ற அர்ப்பணிப்பு ஒரு பெண்ணிடம் மட்டுமே காணப்படும். இதே போன்ற ஒரு சூழலை எதிர்கொள்ள ஆண்கள் தயக்கம் காட்டுவார்கள் என்பதே உண்மை. ‘எதையும் எதிர்கொள்வேன்’ என்ற தளராத தன்னம்பிக்கையின் குறியீடாக இங்கே பெண் மிளிர்கிறாள்.

அனைத்துக்கும் உச்சமாக, இன்று பரவலாகப் பெண்கள் மீது நிகழ்த்தப் படுகின்ற பாலியல் வன்கொடுமை…!! எத்தனை சம்பவங்கள் கேள்விப் படுகின்றோம்?

அண்மையில் கூட, லண்டனில், ஒரு தமிழ் ஆசிரியை ஒரு பூங்காவில் வைத்து வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிர் விட்ட சேதியை அறிந்தோம். இப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது, பாதிக்கப்பட்ட பெண்ணுடைய பெயர் மட்டும்தான் பேசு பொருளாகி விடுகின்றது. அதற்குக் காரணமாயிருந்தவன் அல்லது இருந்தவர்கள் யாரென்பதோ அவர்தம் செயல்களோ ஏன் வெளியே தெரிவதுமில்லை? வருவதுமில்லை?

எங்கெல்லாம் பெண்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இவை போன்ற வேதனைகளும் வலிகளும் இருந்து கொண்டே இருக்கும் என்பதையும், இவற்றையெல்லாம் தாண்டித்தான் ஒவ்வொரு பெண்ணும் சாதனை படைக்கிறாள் என்ற பேருண்மையையும் இந்த உலகம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது அவசியமானதொன்று.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 இனை அனைத்துலக பெண்கள் நாளாக பிரகடனம் செய்து, பெண்களின் பெருமை பேசி, சாதனைப் பெண்களின் பெயர்களைப் பட்டியலிட்டுக் கொண்டாடும் இந்த சமுகம், உலகத்தின் மூலை முடுக்கெங்கும் ஈடிணையில்லா அர்ப்பணிப்புடன் வாழ்க்கையைச் சவாலாக ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ முகம் தெரியாத லட்சோப லட்சம் பெண்களும்கூட இவ்வாறு போற்றுதலுக்குரியவர்கள் என்ற பேருண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

மார்ச் 8 மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் பெண்களுக்கான நாள் என்பதுதான் இன்றைய வாழ்வின் யதார்த்தம்.

         “எல்லா நாளும் பெண்கள் நாளே! 

இவ்வருட மகளிர் நாளுக்கான வாசகமாக இதை முன்மொழிவோமா? வாருங்கள்….!!அனைவரும் கூடி உரத்துச் சொல்வோம்.
“எல்லா நாளும் பெண்கள் நாளே!!!”

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )