எங்களால் இனியும் போராட முடியுமா?

எங்களால் இனியும் போராட முடியுமா?

இனி எங்களால் போராட முடியுமா? என்பது கூட எமக்கு தெரியாமல் இருக்கின்றது என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார்.

வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் முப்பதாம் திகதி சர்வதேச நீதியை கோரி கவன ஈர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்.

உறவுகளை கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு, சரணடைந்து, கையில் ஒப்படைக்கப்பட்ட, எமது உறவுகளை தேடித்தான் நாம் ஜனநாயக போராட்டத்தை அகிம்சை வழியில் 14 வருடங்களாக தொடர்ச்சியாக வீதியில் நின்று போராடி கொண்டிருக்கின்றோம்.

புதிய அரசாங்கமானது, பயங்கரவாத தடை சட்டத்தை எடுப்பதாக கூறி, புதிதாக பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டத்தை அமுல்படுத்த நினைக்கின்றார்கள்.

ஆனால் அதை செய்கின்ற போது எமது ஜனநாயக போராட்டத்திற்கான கருத்து சுதந்திரமோ , தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து போராடுவதற்கு பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டமானது ஒரு படிக்கல்லாக அமையும் என்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடமும், ஏனையவர்களிடமும் நிறைவேற்றாது நிறுத்த வேண்டும் என்பதனை ஊடக வாயிலாக கேட்டு கொள்கின்றோம்.

இலங்கை தேசத்து மக்கள் அழிக்கப்பட்டிருக்கின்ற போதும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கும் எந்த ஒரு நீதியும் வழங்காமல் இந்த சர்வதேசம் பார்த்து கொண்டிருக்கின்றது. அதேபோன்று கடத்தி காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்ற உறவுகளை தேடி நீதிக்காக போராடிக்கொண்டிருக்கின்ற போது இலங்கை தேசத்தை ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கின்றீர்கள்.

உறவுகள் இனியாவது மனிதர்களாக வாழ வேண்டும். ஏனையவர்களுடன் வாழ்வதற்கு உதவ வேண்டும் என்பதற்காக நடக்க இருக்கின்ற கூட்ட தொடரிலாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றங்கள் இழைத்தவர்களை பாரப்படுத்தி மக்களுக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் என்பதை நாம் மிகவும் பணிவாக கேட்டு நிற்கின்றோம்.

இனி எங்களால் போராட முடியுமா? என்பது கூட எமக்கு தெரியாமல் இருக்கின்றது. ஏனென்றால் அச்சுறுத்தல்கள், தடை உத்தரவுகள் இருந்தன. தற்போது நீதிமன்ற வழக்குகள் கூட எமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன. எனவே தொடர்ச்சியாக போராட சர்வதேசம் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )