
இது கண்ணகிகள் காலம்!!
காலச் சக்கரம் சுழலும்!
காட்சிகள் மாறும்!
சிந்தை முழுவதும்
தாய்நிலம் சுமந்து
தம்மைக் கொடுத்தோர்
சரித்திரம் சாகுமோ?
கண்ணகியை நாம்
கண்ணெதிரே பார்த்ததில்லை…..
எமக்குத் தெரிந்ததெல்லாம்
தேசத்திற்காய் தமைக்கொடுத்தோர்!!
அவர் ஈகம்!! – அது
என்றென்றும் வாழும்!!
கனன்ற தீயை கும்பியில் சுமந்து
குற்றுயிராக குடல் வெந்து போனாளே
அம்மா பூபதி..!!
அப்போது அவள்
கண்ணகியாக
கண்ணுக்குத் தெரிந்தாள்!!
அன்று அவளிட்ட
பெரு நெருப்புத்தான் – இன்று
கொழும்பு வீதிகளில்
கொழுந்து விட்டு எரிகிறதோ….?
காலங் கடந்து
புத்தியில் உறைக்கிறது
புத்தரின் குழந்தைகளுக்கு….
அன்றே சொன்னார் – எங்கள்
அண்ணன் பிரபாகரன்!
சிந்தையிற் தெளிவும்
தீர்க்க தரிசனமும்
கொண்ட கொள்கையில்
பிறளாத பண்பும்
ஒருங்கே கொண்ட
உன்னத மனிதன்!!
ஊனிலும் உணர்விலும்
விடுதலை வேள்வியை
விதைத்து வாழ்பவர்
கூற்றில் ஏதும்
குறைகள் இருக்குமோ??
பட்டினிச் சாவுகள்
உங்களைச் சூழும்!
பல்லக்கேறுவோர் – ஒருநாள்
பாதையில் நடக்கவே
நடுங்குவர் கலங்குவர்!!
நீங்கள்
முன்னையிட்ட தீ….
பின்னாளில் உங்களைக்
காவு கொள்ளும்…..
சத்திய வார்த்தைகள் – இப்போ
சிங்கள
சரித்திரத்தை புரட்டிப் போடுது.
கஞ்சிக்காக கையேந்தி நின்ற
காலத்தைத் தந்தவர்!!
இரக்கமேயில்லாமல்
குஞ்சுகள்… குழந்தைகள்….
முதியோர் என்று
எதையும் பார்க்காமல்
பாடையில் ஏற்றி
பரிதவிக்க விட்டவர்……
இறுதி யுத்தம் – என
இறுமாப்படைந்தவர்…….இன்று
பதுங்கவும் குழிகளின்றி
பரிதவித்துக் கிடக்கிறாராம்!!
நாளிதழ்கள் எல்லாம்
நாளாந்தம் புலம்புது!!
பட்டினியும் பணவீக்கமும்
சுற்றி வளைக்குது!
முற்றுகைக்குள் தமிழனை
முடக்கி விட்டோம்
எக்காளம் பேசியோர்
நாட்டை விட்டு ஓடவா – இல்லை
பாதுகாப்பிடம் தேடவா என்று
சித்தம் கலங்கி பித்துப் பிடித்திருக்க…..
பிரபாகரன் காலம்
பொற்காலம் என்ற
ஒப்புதல் வாக்குமூலம்
சிங்கள மக்களிடமிருந்து!!
காலம் கடந்து
புத்தனின் குழந்தைகள்
புத்தியில் உறைக்குது!!
அடித்துச் சொல்வோம்
எங்கள் காலம் – அது
பொற்காலம்!!
நாட்டுக்கு நாடு
கையேந்தவில்லை….
கடனுமில்லை.. வட்டி கட்டவுமில்லை….
பொருளாதார தடைகள் நடுவில்
முப்பது வருடங்கள்….. – நீ…ண்ட
முப்பது வருடங்கள்.
கொலையுண்டு போனோம்!!!
குண்டடி பட்டோம்….!!!
பட்டினி கிடந்து
மாண்டவர் உண்டோ?
துண்டு நிலமும்
கடைசி துளி தண்ணீரும்
பஞ்சி பார்க்காத
உடல் உழைப்பும்
பஞ்சத்தில் இருந்து
எங்களைக் காக்கும்!!
தமிழர்க்கென்று
தனிக்குணம் உண்டு…
எந்தப் பெருநெருப்பும்
எம்மைத் தீண்டாது – இது
கண்ணகிகள் காலம்!!
-கார்த்திகை