பேச்சில் முன்னேற்றம் இல்லை; வாக்குறுதிகள் மீறல்;  ஜனாதிபதி – தமிழ் தரப்பு பேச்சுக்கள் தொடருமா?

பேச்சில் முன்னேற்றம் இல்லை; வாக்குறுதிகள் மீறல்; ஜனாதிபதி – தமிழ் தரப்பு பேச்சுக்கள் தொடருமா?

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் வடக்கு, கிழக்கு தமிழ் எம்.பிக்கள் பங்கேற்பார்களா? என்பது குறித்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

தமிழ் தரப்புக்கள் கலந்து பேசியே அடுத்த கட்ட பேச்சுக்கு செல்வதா? என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என பேச்சில் பங்கேற்ற தமிழ் கட்சிகளில் ஒன்றான ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இம்மாதம் 11 ஆம் திகதி மற்றும் 15 ஆம் திகதிகளில் ஜனாதிபதிக்கும் தமிழ் தரப்புகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும் இந்தப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஜனாதிபதியால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என தமிழ் எம்.பிக்கள் தரப்பில் விசனம் வெளியிடப்பட்டு வருகிறது.

குறிப்பாக வட-கிழக்கில் காணி ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் என ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி கூட நிறைவேற்றப்படவில்லை. காணி ஆக்கிரமிப்பு முயற்சிகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன என ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

அத்துடன், மாகாண சபைத் தேர்தலை நடத்தி, உடனடியாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு நாங்கள் கோரிக்கை விடுத்தோம். அதற்கும் ஜனாதிபதி தரப்பில் இணக்கம் வெளியிடப்படவில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்தும் காலத்தை இழுத்தடிப்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கம் போன்று தென்படுகிறது.

இதனை விட அடிப்படைப் பிரச்சினைகளான ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு, காணி ஆக்கிரமிப்பு நிறுத்தம், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோருக்கான நீதிப் பொறிமுறை உள்ளிட்ட எந்தவொரு விடயங்களும் நிறைவேற்றப்படவில்லை. அவற்றுக்கான ஆரம்பகட்ட பணிகள் கூட இடம்பெறுவதாகத் தெரியவில்லை. இவ்வாறு பேசிய எதுவுமே நடக்காமல் அடுத்த சுற்று பேச்சுக்கு செல்வது பிரியோசனமல்ல என்றே நான் கருதுகிறேன் எனவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை இழுத்தடிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் போன்று தெரிகிறது. அதற்கு இடமளிக்க முடியாது. இந்நிலையில் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள அடுத்த சுற்றுப் பேச்சுக்குச் செல்வதா? என்பது குறித்துத் தீர்மானிக்க வேண்டியுள்ளது. தமிழ்த் தரப்புக்கள் கலந்து பேசி இது குறித்த முடிவொன்றை எடுப்போம் எனவும் ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )