மதக் கலவரங்களை உருவாக்கச் சதி!

மதக் கலவரங்களை உருவாக்கச் சதி!

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மஞ்சு ஸ்ரீ நிஷங்காவின் செயல்பாடுகளுக்கு எதிராக உடனடி விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு தேசிய சுதந்திர முன்னணி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் தேசிய அமைப்பாளர் ஜெயந்த சமரவீரவினால் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதுடன்,அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத நல்லிணக்கத்திற்கு குறிப்பாக பௌத்த மதத்திற்கு இடையூறு விளைவிக்கும் சில கும்பல்களும் குழுக்களும் நாட்டில் செயற்படுவதை நீங்கள் அறிவீர்கள் என்பதும் உண்மை. இந்தப் போக்கு நாளுக்கு நாள் மோசமாகி வருவதும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் மஞ்சு ஸ்ரீ நிஷங்காவின் செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது.

ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக ஒரு குறிப்பிட்ட மத போதகரின் கருத்துக்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தீயில் ஆழ்த்தும் என்பது நாம் அறிந்த உண்மை. அதை நன்கு அறிந்த வெளிச் சக்திகள், நாட்டின் அமைதியான சூழலை சீர்குலைக்க இதுபோன்றவர்களை பயன்படுத்துகின்றன. மக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக, மேற்கூறிய நபர் சமீபத்தில் பெரும் தொகைக்கு வாங்கியதாகக் கூறப்படும் ஒரு குறிப்பிட்ட சமூக ஊடக சேனல் மூலம், மத நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் பொது அமைதியின்மைக்கு வழிவகுக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இது ஒரு தனிச் சம்பவம் அல்ல, மத மோதல்களை உருவாக்கி நாட்டைக் கொளுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மேற்கூறிய வெளி சக்திகளின் ஆதரவும் இதற்குக் கிடைத்திருப்பதாகவும் தெரிகிறது. மஞ்சு ஸ்ரீ நிஷங்கவின் மேற்படி அவமானகரமான செயற்பாடுகளுக்கு எந்தெந்த புலனாய்வுப் பிரிவினர் மற்றும் வெளிநாட்டு அமைப்புக்கள் பணம் வழங்குகின்றன என்பதை அறிய உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான முறையான விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், மதக்கலவரங்களை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குற்றங்களைச் செய்து வரும் இவர் மீதும் அவரது கும்பலுக்கும் எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்வதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )