
பொலநறுவையில் பழமையான சிவாலயங்கள் பலவற்றை அழித்து மறைக்கும் செயல் தீவிரம்
பிக்குகளுடன் இணைந்து முன்னெடுப்பு – மாவட்ட இந்துக் குருமார் ஒன்றியம் குற்றச்சாட்டு
பொலநறுவையில் பழமையான சிவாலயங்கள் பல அழிக்கப்பட்டு மறைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன் இதனை சில பௌத்த பிக்குகளும் இணைந்து முன்னெடுத்து வருவதாக பொலநறுவை மாவட்ட இந்துக் குருமார் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழர்களின் பூர்வீக காணிகளையும் அபகரிக்கும் செயற்பாடுகள் மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலநறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ து.சத்தியநாதன் சர்மா தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை பொலநறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியத்தினரால் ஊடக சந்திப்புபொன்று நடாத்தப்பட்டது.இந்த ஊடகச் சந்திப்பில் பொலநறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ து.சத்தியநாதன் சர்மா,செயலாளர் சிவஸ்ரீ ரதன் சர்மா ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ து.சத்தியநாதன் சர்மா,
பொலநறுவை மாவட்டம் பெரும்பான்மை சிங்கள மக்களைக்கொண்டபோதிலும் வெலிக்கந்தை பிரதேச சபை,திம்புலாகல பிரதேச சபை பகுதிகளில் தமிழ் மக்கள் பரந்து வாழுகின்றனர்.
இலங்கையில் உள்ள தமிழ் பேசும் அமைப்புகள் பொலநறுவை மாவட்டத்தின் பக்கம் தமது பார்வையினை செலுத்த வேண்டும்.
பொலநறுவை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர்.பழமையான சிவாலயங்கள் அழிக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளன.அங்குள்ள மக்களுக்கு சிறந்த அரசியல் தலைமைத்துவம் இல்லை.பொலநறுவையில் பல சிவாலயங்கள் உள்ளன.எத்தனையோ சிவாலயங்கள் அநுராதபுரத்திலும், பொலநறுவையிலும் மறைக்கப்பட்டுள்ளன.முத்துக்கல் என்னும் கிராமத்தின் காட்டுப்பகுதியில் சிவாலயம் ஒன்று மறைக்கப்பட்டுள்ளது .அங்கிருந்த சிவலிங்கம் உடைக்கப்பட்டுள்ளது.அங்கு பல புராதன சின்னங்கள்,புராதன கால எழுத்துக்கள் உள்ளன.அந்த ஆலயங்கள் பௌத்த தேரர்களின் கைவசம் சென்றுள்ளது.அந்த இடத்திற்கு செல்வதற்கு எங்களை அனுமதிப்பதில்லை.அங்கு பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்றது.தொல்பொருள் ஆராய்ச்சிஎன்ற போர்வையில் கோயில்கள் அழிக்கப்பட்டு புதையல்கள் தோண்டப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
இவை குறித்தெல்லாம் ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டு அந்த ஆலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.அதற்குரிய நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.இல்லையேல் எல்லாமே அளிக்கப்பட்டு விடும். இவ்வாறான நிலையிலேயே பொலநறுவை இந்துக்குருமார் ஒன்றியம் சமய பணிகளில் ஈடுபட்டுவருகின்றது. கிராமம் கிராமமாக சென்று மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்துவருகின்றோம்.பல்வேறு பிரச்சினைகளுடன் மக்கள் வாழுகின்றார்கள்.வறுமையின் காரணமாக பாடசாலை கல்வியை நிறுத்திய நிலையிலும் மாணவர்கள் இருக்கின்றார்கள்.இவர்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைளை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றோம்.
இங்குள்ள மாணவர்களுக்கு சரியான அறநெறிப் போதனைகளை வழங்கும் பணிகளை முதல்கட்டமாக முன்னெடுத்தோம்.
அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு வளைகுடா வானம்பாடிகள் அமைப்பிடம் கோரியபோது எமக்கு வழங்கப்பட்டது.
பொலநறுவை மாவட்டத்தில் எட்டு அறநெறிப்பாடாலைகள் உள்ளன.சுமார் 600மாணவர்கள் அங்கு கற்றுவருகின்றனர். இதேபோன்று கற்றல் உபகரணங்களுடன் பிள்ளைகளுக்கு உணவுகளை வழங்குவதற்கும் அவர்கள் தீர்மானித்திருந்தார்கள். வளைகுடா வானம்பாடிகள் அமைப்பின் செயற்பாடுகள் எங்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகயிருந்தது.எங்களுக்கு அந்த அமைப்பு ஊடாக நிறைய விடயங்களை செய்திருந்தார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

