
பௌத்தத்துக்கு பாதிப்பென கூறுவோரிடம் சிங்கள மக்கள் ஏமாந்துவிடக் கூடாது
பௌத்தத்துக்கு பாதிப்பு என்று கூறிக் கொண்டு ஒரு தரப்பினர் பிரசாரம் செய்வதற்கு சிங்கள மக்கள் ஏமாந்துவிடக் கூடாது.வரலாற்றில் சிங்களவர்கள் ஏமாற்றமடைந்தது போதும் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின்எம்.பி.யும் முன்னாள் இராணுவத்தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,ஊழல் அரசியல்வாதிகளை இல்லாதொழிக்க மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும். அதற்காக நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளேன் என்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிதி ஒழுங்குபடுத்துகை தொடர்பான விவாதத்தில் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஊழல் அரசியல்வாதிகள் மாத்திரமே மக்கள் போராட்டத்தை கடுமையாக சாடுகிறார்கள்.போராட்டத்தினால் தான் ராஜபக்சக்களிடமிருந்து நாடு பாதுகாக்கப்பட்டு பாரிய மாற்றம் அரசியலமைப்பின் ஊடாக ஏற்பட்டது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
பௌத்தத்துக்கு பாதிப்பு என்று கூறிக் கொண்டு ஒரு தரப்பினர் செய்யும் பிரசாரத்துக்கு சிங்கள மக்கள் ஏமாற கூடாது.வரலாற்றில் ஏமாற்றமடைந்தது போதும். மின் கட்டணத்தை அதிகரிக்க ஜனக ரத்நாயக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அரசாங்கம் அவரை எதிரியாக பார்த்தது. அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மக்களுக்காக குரல் கொடுத்த காரணிகளை உள்ளடக்கியதாக காணப்பட்டது.இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக் குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க எமக்கு இணங்க செயற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கூறுகின்றார்..ஊழல் அரசியல் மீண்டும் தலைதூக்கியுள்ளமை கவலைக்குரியது.
தமது தேவைகளுக்காகவே புதிய சட்டங்களை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்,ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் ஆகியவற்றை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.இவை நாட்டு மக்களுக்கு ஏதாவதொரு வழிமுறையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
காலி முகத்திடல் தொடர்பில் புத்தகம் எழுதி மக்களை தவறாக வழிநடத்த முடியாது ஊழல் அரசியல்வாதிகளை இல்லாதொழித்து சிறந்த அரசியல் கலாசாரத்துக்காக மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும்.அதற்காக நான் நாடளாவிய ரீதியில் பிரசாரங்களை முன்னெடுக்கவுள்ளேன் என்றார்.

