மலையகப் பெண்ணை பொலிஸ் நிலையத்தில் அடித்தே கொன்றனர்;  மனோ ,விமல் வீரவன்ச கடும் குற்றச்சாட்டு

மலையகப் பெண்ணை பொலிஸ் நிலையத்தில் அடித்தே கொன்றனர்; மனோ ,விமல் வீரவன்ச கடும் குற்றச்சாட்டு

கொழும்பில் நடிகை சுதர்மாவின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய பதுளை தெமோதர பகுதியைச் சேர்ந்த ராஜன் ராஜகுமாரி என்ற பெண் அந்த வீட்டில் மோதிரம் ஒன்று காணாமல் போனமை தொடர்பாக வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்தமைக்கு நீதி கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

பொலிஸ் நிலையம் சென்ற நடிகையைப் பார்த்தது பொலிஸார் மயங்கிவிட்டனர்.எனவே அந்தப் பெண்ணின் அவரின் மரணம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தின.

பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இ்டம்பெற்றதைத் தொடர்ந்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விசேட கூற்றொன்றை முன்வைத்து கூறுகையில்,

புதுளை தெமோதர பிரதேசத்தைச் சேர்ந்த ராஜகுமாரி என்ற பெண் கொழும்பில் நடிகை சுதர்மா நெத்திகுமார என்ற நடிகையின் வீட்டிலே பணி புரிந்துவந்த நிலையில் அவர் மரணித்துள்ளார். அவரை கொலை செய்ததாகவே நாங்கள் தெரிவிக்கிறோம். அந்தப் பெண் மரணமடைந்த நிலையில் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் அவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அவரின் மரணம் தொடர்பாக பக்கச் சார்ப்பற்ற விசாரணை இடம்பெறவேண்டும். அதற்காக பெண்ணின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து, பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்ட மருத்துவ பீடத்துக்கு அனுப்பி சுயாதீன விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம்.பி. கூறுகையில்,

மனோ கணேசன் எழுப்பிய பிரச்சினை உணர்வு பூர்வமானது. இந்த பிரச்சினையை எவரும் புறக்கணித்து செல்ல முடியாது. குறித்த மலையக பெண் பணி புரிந்த நடிகை சுதர்மா என்பவரின் வீட்டில் நகை காணாமல் போனமை தொடர்பில் இப்பெண் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

நடிகை சுதர்மா பொலிஸ் நிலையத்தில் இருந்த நிலையில் அவருக்கு முன்னாலே அந்தப் பெண்ணை பொலிஸார் தாக்கி இருக்கின்றனர். இதனை பார்த்துக்கொண்டு சுதர்மா தொலைபேசியில் தனது நண்பர்களுக்கு அறிவித்திருக்கிறார். பொலிஸ் நிலையத்தில் யாரையும் அடித்து கொலை செய்ய முடியாது.எனவே அந்தப் பெண்ணுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், பொருளாதார கஷ்டம் காரணமாகவே மலையத்தில் இருக்கும் மக்கள் கொழும்புக்கு வேலைக்கு வருகின்றனர். அதனால் மரணித்துள்ள பெண்ணின் மரணம் தொடர்பாக பக்கச்சார்ப்பற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மலையகத்தில் இருந்து கொழும்புக்கு வரும் அந்த மக்களுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் அந்த மக்களுக்கு இருந்து வருகிறது. அதனால் இது தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொண்டு அப்பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )