தையிட்டி விகாரையை திறப்பதற்கு ஏற்பாடு; எதிர்த்த 9 பேர் கைது; கஜேந்திரன் எம்.பி. குழறக் குழற தூக்கி வந்த பொலிஸார்

தையிட்டி விகாரையை திறப்பதற்கு ஏற்பாடு; எதிர்த்த 9 பேர் கைது; கஜேந்திரன் எம்.பி. குழறக் குழற தூக்கி வந்த பொலிஸார்

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள பெளத்த விகாரையை , அகற்ற கோரி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்தரணி ஒருவர் , நான்கு பெண்கள் உள்ளிட்ட 9 பேர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலிகாமம் வடக்கில் தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்துச் சட்டவிரோதமாகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையைத் திறப்பதற்கான முயற்சிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அந்த சட்டவிரோத கட்டுமானத்தை அகற்றுமாறு கோரியும், அதனைச் சுற்றியுள்ள தனியாருடைய காணிகளை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை மீண்டும் அந்த விகாரைக்கு அருகில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஆரம்பமான நிலையில் நேற்று இரண்டாவது நாளாகவும் அங்கு கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை 2ஆவது நாளாக இந்த விகாரைக்கு சற்று தூரத்தில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

இதன் போது அங்கு வந்திருந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் , இவ்விடத்தில் சட்டவிரோதமான முறையில் கூட முடியாது. அதனால் இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்லுமாறு பணித்தனர்.

அதனை மீறி அங்கு நின்றவர்களை சட்டவிரோதமான முறையில் கூடி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்றனர் எனும் குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் , நான்கு பெண்கள் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.

இதன்போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவியை கைது செய்வதற்குப் பொலிஸார் முயற்சி செய்த நிலையில் பெண் பொலிஸ் எவரும் இல்லாமல் தன்னைக் கைது செய்ய முடியாது என அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்தார். இந்நிலையில் பொலிஸார் ஒருவர் அவருக்குத் தடியாலும் மற்றொரு பொலிஸ் கான்ஸ்டபிள் அவரது நெஞ்சிலும் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை அங்கிருந்து அசையவிடாது பொலிஸ் பொறுப்பதிகாரி இறுகப் பிடித்திருந்த நிலையில் அவரும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து கஜேந்திரனை கட்டிப் பிடித்து, அவர் குழறக் குழற பலவந்தமாக இழுத்துச் சென்று விகாரை உள்ள வீதியின் முகப்பிற்கு வெளியே கொண்டு சென்று போட்டார்கள். ஆனால் கைது செய்யவில்லை.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )