
திருமலை கந்தசாமி ஆலய காணியில் புத்தர் சிலை 2 ஆம் நாளாக தொடர்ந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் வில்லூன்றி கந்தசாமி ஆலயத்திற்கு சொந்தமான காணியில் புத்தர் சிலையை நிறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாது நாளாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வில்லூன்றி கந்தசாமி ஆலயத்துக்கு சொந்தமான காணியில் தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை, பௌத்த சின்னங்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறுவ தேரர்கள் முன்னேற்பாடுகளை செய்தனர்.
இதனையறிந்த தமிழ் தேசிய முக்கள் முன்னணி கட்சி செயலாளரும் எம்.பி.யுமான செல்வராசா கஜேந்திரன் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் சனிக்கிழமை காலையில் பௌத்த சின்னங்களை நிறுவ ஏற்பாடு செய்யப்பட்ட காணிக்கு முன்பாக ஓன்றிணைந்து தமிழ் உரிமைக்கு குண்டுகள் தீர்வாகாது, எமது நிலம் எமக்கு வேண்டும், மண்துறந்து புத்தருக்கு தமிழர் மண்மீது ஆசையா?திருமலை எங்கள் நகரம், ஆக்கிரமிப்பிற்கு அடிபணியோம், வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று ஞாயிறுக்கிழமை மீண்டும் 2 ஆவது நாளாக தொடர்ந்து அந்தப் பகுதியில் காலை 9 மணி தொடக்கம் பகல் 2 மணிவரை ஏதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

