
ஜனாதிபதி தமிழ் எம்.பி.க்கள் மீண்டும் இன்று பேச்சு
வடக்கு,கிழக்கு மாகாண தமிழ் எம்.பி.க்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சு வார்த்தை மீண்டும் இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அபிவிருத்தி, அதிகாரப்பகிர்வு ,நிலவிடுவிப்புக்கள் தொடர்பில் வடக்கு,கிழக்கு மாகாண தமிழ் எம்.பி.க்களுடன் 11,12,13 ஆகிய தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பேச்சு நடத்த அழைப்புவிடுக்கப்பட்ட நிலையில் 11 ஆம் திகதி வியாழக்கிழமை வடக்கு,கிழக்கு மாகாண தமிழ் எம்.பி.க்களுடன் பேச்சு நடத்திய நிலையில் 12,13 ஆம் திகதிகளுக்கான பேச்சுக்கள் திடீரென இரத்து செய்யப்பட்டு 15 ஆம் திகதி மீண்டும் பேச்சு இடம்பெறுமென ஜனாதிபதியின் மேலதிக செயலர் இளங்கோவனினால் வடக்கு,கிழக்கு மாகாண தமிழ் எம்.பிக்களுக்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள ‘அஷ்வசும’ நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட் டளை சட்டத்தின் கீழான தீர்மானம் ஆகியவற்றின் மீதான வாக்கெடுப்பில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டுமெனக்காரணம் கூறியே இரு நாட்களுக்கான சந்திப்பும் இரத்து செய்யப்பட்ட போதும் பாராளுமன்றத்தில் அன்றையதினம் வாக்கெடுப்பு எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.
இவ்வாறான நிலையிலேயே வடக்கு,கிழக்கு மாகாண தமிழ் எம்.பி.க்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சு வார்த்தை மீண்டும் இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. எனினும் சில வேளைகளில் இந்த சந்திப்பு மீண்டும் ஒத்திவைக்கப்படலாமென்ற சந்தேகமும் தமிழ் எம்.பி.க்களிடம் காணப்படுகின்றது.

