தேர்தலை நடத்தாமல் இருப்பது தவறானது

தேர்தலை நடத்தாமல் இருப்பது தவறானது

தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்வது நல்ல விடயம். ஆனால் சீர்திருத்தம் இன்னும் செய்யவில்லை என்ற காரணத்திற்காக தேர்தலை நடத்தாமல் இருப்பது தவறான விடயம் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் வவுனியாவில் நேற்று இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழரசுக்கட்சியின் யாப்பில் செய்யப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பாக பேசியிருக்கிறோம். அது தொடர்பில் நீண்டகாலமாக பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை உள்ளடக்குவதுடன், புதிய திருத்தங்களை சேர்ப்பதற்குமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பான விடயங்கள் இன்று(நேற்று) சபையிலே சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை ஆராய்ந்துள்ளோம். முழு ஆவணத்தையும் பார்ப்பதற்கு நேரம் போதவில்லை எனவே பிறிதொரு தினத்தில் அது தொடர்பாக ஆராய்வோம்.

ஜனாதிபதியுடனான எமது சந்திப்பில் அதிகார பகிர்வு தொடர்பான விடயங்களே பேசப்படும் என சொல்லப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக ஏற்கனவே நான்கு தடவைகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். செய்யப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக எழுத்துவடிவிலும் அவருக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றோம்

மாகாணசபை தேர்தல் நடாத்தப்படவேண்டும். வெறுமனே சட்டங்களை திருத்தி விட்டு மாகாணசபைகள் இயங்காமல் விட்டால் அதில் அர்த்தமில்லை.ஒரு அரசாங்கம் செய்யவேண்டிய விடயத்தை ஒரு கட்சிசெய்துள்ளது. தனிநபர் சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கின்றேன். அதனை

சிங்களத் தரப்பை சேர்ந்த இருவர் சவாலுக்குட்படுத்தியதுடன் உயர் நீதிமன்றத்தில் அது தொடர்பில் ஒரு விவாதம் இடம்பெற்றது.

அதனடிப்படையில் உயர் நீதிமன்றம் இது தொடர்பான தீர்ப்பினை பாராளுமன்றுக்கும் ஜனாதிபதிக்கும் அறிவிக்கும். இந்த சட்டமூலத்தை அமுல்படுத்தினால் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடாத்தமுடியும். அப்பிடி நடாத்தும்போது பழைய தேர்தல் முறையிலேயே நடத்தலாம்.

தேர்தல் முறையில் சீர்சிருத்தம் செய்வது நல்ல விடயம். ஆனால் சீர்சிருத்தம் இன்னும் செய்யவில்லை என்ற காரணத்திற்காக தேர்தலை நடத்தாமல் இருப்பது தவறான விடயம். எனவே தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான வாக்குரிமையை அரசாங்கம் மறுதலிக்ககூடாது.

இதேவேளை மகிந்தவை பிரதமராக நியமிக்க போவதாக ஒரு வதந்தி பரவியது. அப்படி நடந்தால் கடந்தவருடம் போராட்டம் நடத்தியவர்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும்எனும் பயத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவே நாம் அறிகின்றோம்.

திருகோணமலையில் இன்று(நேற்று) பதற்றம் ஒன்று நிலவியது. இந்த விடயம் தொடர்பாக சம்பந்தன்,ஜனாதிபதியிடம் முன்னரே கூறியிருந்தார். அங்கு சிலைவைக்க அனுமதிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி எமக்கு தெரிவித்திருந்தார். சிலை வைக்கப்படவில்லை என்ற செய்தி எமக்கு கிடைத்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதிக்கிளை கூட்டத்தில் எந்த கைகலப்பும் இடம்பெறவில்லை என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )