கோத்தா – கப்ரால் சென்ற பாதையில் செல்லும் அரசு; பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்.பி.

கோத்தா – கப்ரால் சென்ற பாதையில் செல்லும் அரசு; பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்.பி.

கோத்தாபய – கப்ரால் சென்ற பாதையிலேயே தற்போதைய அரசாங்கமும் பயணிக்கின்றது என்று எதிர்கட்சியில் சுயாதீனமாக இயங்கும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அஸ்வெசும நலன்புரி நன்மைகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து விடுபட பிரதான வழியாக மொத்த தேசிய உற்பத்தியை அதிகரிப்பதே ஆகும். திறைசேரி முறிகள் தொடர்பான சட்டமூலத்தை தற்போது அவசரமாக கொண்டு வந்துள்ளனர். இது முறையாக கலந்துரையாடப்படாது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அரசாங்கமும் முன்னாள் அரசாங்கம் போன்றே செயற்படுகின்றது. கோத்தாபய ராஜபக்‌ஷ, அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டோர் சென்ற பாதையிலேயே செல்கின்றனர். இவர்களால்தான் அதிகளவில் பணத்தை அச்சிடவும், அதிக வட்டி வீதத்தையும் அறவிட நேர்ந்தது. வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையையும் கடந்து நாங்கள் செல்கின்றோம். வருமானத்தை விடவும் செலவு அதிகரித்து மீண்டும் விழப் போகின்றோம்.

மத்திய வங்கி சட்டமூலத்தை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை எடுத்துக்கொள்ளாது வேறு சட்டமூலத்திற்கு சென்றுள்ளனர். அதனை கொண்டு வந்திருந்தால் திறைசேரி முறி தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாது இருக்கும். இதனால் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் சட்டமூலத்தின் ஊடாக அதனை நிறுத்தியுள்ளனர் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )