
ஜனாதிபதி – தமிழ் தரப்பு பேச்சில் உருப்படியான முடிவுகள் இல்லை
-பார்க்கிறேன், ஆராய்கிறேன், பரிசீலிக்கிறேன் என்றே ஜனாதிபதி பதில்
-காணி ஆக்கிரமிப்புக்கள் இனிமேல் நடக்காது என உத்தரவாதம்
-காணமலாக்கப்பட்டோர் இல்லை என உறவுகளுக்கு விரைவில் சான்றிதழ்
தமிழ் மக்களின் உடனடி, அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி – தமிழ் எம்.பிக்களிடையே நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் காணி ஆக்கிரமிப்புக்கள் உடனடியாக நிறுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை தவிர வேறு எந்த உருப்படியான முடிவுகளும் ஜனாதிபதி தரப்பில் வழங்கப்படவில்லை.
அரச படைகளாளோ அல்லது அரச திணைக்களங்களாலோ இனிமேல் காணி ஆக்கிரமிப்புகள் இடம்பெறாது என்ற உறுதிமொழியை நேற்றைய பேச்சின் போது ஜனாதிபதி வழங்கினார். இது குறித்து அவர் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரச திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக தமிழ் எம்.பிக்கள் தெரிவித்தனர்.
எனினும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான நீதிப் பொறிமுறை விவகரம் தொடர்பில் ஜனாதிபதி உருப்படியான முடிவுகள் எதனையும் தெரிவிக்கவில்லை என இந்தப் பேச்சில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சி.சிறீதரன், த.சித்தார்த்தன், அங்கயன் ராமநாதன் உள்ளிட்டவர்கள் தெரிவித்தனர்.
காணி ஆக்கிரமிப்பு
காணி ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் நேற்றைய பேச்சில் பங்கேற்ற தமிழ் எம்.பிக்களால் கடும் விசனம் வெளியிடப்பட்டது. நல்லிணக்கம் என்று கூறிக்கொண்டே தமிழர் பகுதிகளில் தொடர்ச்சியாக காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக தமிழ் எம்.பிக்கள் விசனத்துடன் சுட்டிக்காட்டினர்.
தையிட்டி தனியார் காணியை ஆக்கிரமித்து விகாரை அமைக்கப்பட்டுள்ளமை, வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை ஆக்கிரமிப்பு முயற்சிகள், கிழக்கு மாகாணத்தில் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு என வட,கிழக்கில் நீளும் நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்த மயமாக்கல் முயற்சிகள் குறித்த நீண்ட பட்டியலை தமிழ் எம்.பிக்கள் வெளியிட்டனர்.
வட,கிழக்கில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்த மயமாக்கல் முயற்சிகள் தொடர்பில் அடையாளம் கண்டு தயாரிக்கப்பட்ட பட்டியலை சிறீதரன் எம்.பி. ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தார்.
இந்நிலையில் இனிமேல் இவ்வாறான காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இடம்பெறாது என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி தமிழ் எம்.பிக்களிடம் வழங்கினார். அத்துடன், இவ்வாறான ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறக் கூடாது என பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச திணைக்களங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
காணி விடுவிப்பு
இதேபோன்று பேச்சில் பங்கேற்ற தமிழ் எம்.பிக்கள் வட,கிழக்கில் அரச படைகள், அரச திரணக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தினர்.
எனினும் இதற்கு உடனடியாக எந்த உருப்படியான உறுதிமொழிகளையும் ஜனாதிபதி வழங்கவில்லை. மாறாக மாவட்ட ரீதியாக குழுக்களை அமைத்து காணி விடுவிப்பு குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக பேச்சில் பங்கேற்ற தமிழ் எம்.பிக்கள் தெரிவித்தனர்.
காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்
காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் குறித்துப் பேசப்பட்ட நிலையில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து நீண்ட காலம் பேசிக்கொண்டிருப்பதை விட அதற்குத் தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பதில் மற்றும் நீதிப் பொறிமுறை குறித்து கருத்து வெளியிடாத ஜனாதிபதி, காணாமலாக்கப்பட்டோர் இல்லை என்ற சான்றிதழை அவர்களின் உறவுகளுக்கு வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். எனினும் இதற்கு தமிழ் எம்.பிக்கள் தரப்பில் பலர் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டனர். இந்த விவகாரத்தில் சர்வதேச நீதிப் பொறிமுறையில் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
அரசியல் கைதிகள் விடுதலை
அரசியல் கைதிகள் விடுதலை குறித்து இப்பேச்சில் தமிழ் எம்.பிக்களால் வலியுறுது்தப்பட்டது. இந்நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்கள் தவிர ஏனைய அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் தெரிவித்தார்.
39 அரசியல் கைதிகள் விடுதலை இந்த வருடம் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் 16 அரசியல் கைதிகள் வழக்கு நீதிமன்றில் உள்ளது. அவ்வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் என சட்டமாக அதிபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக பேச்சில் பங்கேற்ற தமிழ் எம்.பிக்கள் குறிப்பிட்டனர்.

