தொல்பொருளியல் திணைக்களத்தினால் வட,கிழக்கில் ஆக்கிரமிப்பு; முழு விபரங்களும் சபையில்

தொல்பொருளியல் திணைக்களத்தினால் வட,கிழக்கில் ஆக்கிரமிப்பு; முழு விபரங்களும் சபையில்

”வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் தொல்பொருளியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்”என்ற முழுமையான விபரங்கள் புகைப்படங்கள் அடங்கிய அறிக்கையொன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் சபையில் ஆற்றுப்படுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி, இறக்குமதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் சில தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே இந்த அறிக்கையை சபையில் சமர்ப்பித்து ஸ்ரீதரன் உரையாற்றினார்.

தமிழர் தாயகத்தின் இதயபூமியான முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு ஆரம்பிக்கும்பிரதேசமான பழைய செம்மலைப் பகுதியில் காலாகாலமாக இருந்துவரும் இந்துக்களின் ஆலயமான பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து அங்குபௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை ,வவுனியா மாவட்டம்,நெடுங்கேணி (வவுனியா வடக்கு) பிரதேச செயலாளர் பிரிவின் ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 3மைல் தொலைவில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய ஆக்கிரமிப்பு, முல்லைத்தீவு மாவட்டம், நெடுங்கேணி பிரதேசத்திலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள தண்ணிமுறிப்புக் குளத்தின் வடக்குப் பக்கத்தில் குருந்தூர் மலை ஆக்கிரமிப்பு-

கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் ஆளுகைக்குட்பட்ட உருத்திரபுரம் கிராமத்தில் இந்துக்களின் பொற்காலமாகக் கருதப்படும் சோழர்காலத்தில்

முற்றுமுழுதாக திராவிடக் கட்டடக் கலைமரபைப் பின்பற்றி கட்டப்பட்டு மூர்த்தி தலம்,தீர்த்தம் என்பன இயல்பாய் அமையப்பெற்ற உருத்திரபுர நாயகி உடனுறை

உருத்திரபுரீஸ்வரர் சிவாலயம் என்னும் வரலாற்றுத் தொன்மையும் பழமையும் வாய்ந்த சிவாலயத்தை அபகரிப்பதற்கான முயற்சி ,கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கௌதாரிமுனை மண்ணித்தலை சிவன் கோவில் பணிகள் ,வழிபாடுகளுக்கு அனுமதி மறுப்பு, கிளிநொச்சி மாவட்டம்,கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிருஸ்ணபுரம் கிராமத்தில் கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பிள்ளையார் கோவில் அகற்றப்பட்டு புத்தரை சிலை வைக்கப்பட்டமை, யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் கிழக்கு பிரதேசத்தின் புத்தூரை அண்மித்திருக்கும் ஒருகிராமம்தான் நிலாவரை. இந்த இடத்தில் இயற்கையாக அமைந்த ஆழங்காண முடியாத கிணற்றில் மேற்கொள்ளப்படும் ஆய்வுப்பணி ,போர் முடிவுற்று 13 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் விடுவிக்கப்படாத நிலையில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் கீரிமலையில் இருந்த ஆதிலிங்கேஸ்வரர்ஆலயம் மற்றும் சடையம்மா மடம் என்பவற்றோடு அங்கிருந்த இந்துமத அடையாளங்கள் இடித்து அழிக்கப்பட்டுள்ளமை-

.முற்றுமுழுதாக இந்து சமயத்தைப் பின்பற்றுகின்ற மக்கள் வாழும் யாழ்ப்பாண மாவட்டம்,தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள நாவற்குழி பகுதியில் நல்லிணக்க விகாரை என்னும் பேரில் அமைக்கப்பட்ட சமித்தி சுமண விகாரை,மக்களின் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியிலும் கடந்த 2023.03.18 அன்று மிகப் பிரமாண்டமான முறையில்பௌத்த மத சம்பிரதாயங்களுக்கு அமைய திறந்து வைக்கப்பட்டுள்ளமை ,யாழ்ப்பாண மாவட்டம், வலிகாமம் வடக்கு, மயிலிட்டியில் அமைந்திருந்த பல நூறுவருடங்கள் பழைமையான வரசித்தி விநாயகர் ஆலயம் மற்றும் சென் மேரிஸ் தேவாலயம் ஆகியவை முற்றாக தரைமட்டம் ஆக்கப்பட்டு இராணுவ மாளிகை ஒன்று அவற்றின் மீது கட்டப்பட்டுள்ளமை .யாழ்ப்பாண மாவட்டம்,தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தையிட்டிதெற்கு பிரதேசத்தில் திஸ்ஸ விகாரை என்னும் பெயரிலான புதிய விகாரை ஒன்று பொதுமக்களுக்குச் சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுஅந்தக் காணியில் குடியிருந்தபொது மக்கள் அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளமை யாழ்ப்பாணத்தின் வலிகாமம்,மாதகல் பகுதியில் அமைந்துள்ள சம்பில்துறைப் பிரதேசத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்களின் பெருமளவான நிலப்பகுதியில் மாபெரும் விகாரையொன்று அமைக்கப்பட்டுள்ளமை-

யாழ்ப்பாணத்தின் தனிப்பெரும் தீவான நெடுந்தீவு மண்ணின் கோட்டைக்காடு எனஅழைக்கப்படும் நெடுந்தீவு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் இன்றும் தமிழர் தம் பண்பாட்டு மரபியல் அடையாளமாகப் பேணப்பட்டு வருவதும் கி.மு.200 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நெடுந்தீவு,நயினாதீவு,ஊர்காவற்றுறை காரைநகர்,தொல்புரம்,பூநகரி, மன்னார் போன்ற பகுதிகளை ஆட்சிசெய்த ஈழத்தமிழ் மன்னனான விஷ்ணுபுத்திர வெடியரசன் காலத்தில் அமைக்கப்பட்டதுமான விஷ்ணுபுத்திர வெடியரசன் கோட்டையை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சமாக நிறுவுவதற்கான முனைப்புகள் தொல்பொருளியல் திணைக்களத்தினால் மிகத் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை நயினாதீவு, மாவிட்டபுரம் சிவன் கோவில்,திருக்கேதீஸ்வரம்,கன்னியா வெந்நீரூற்று ,சாம்பல்தீவு புத்தர் சிலை உள்ளிட்ட இன்னும் பல் விடயங்களை புகைப்பட ஆதாரங்களுடன் .தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஸ்ரீதரன் எம்.பி. சபையில் ஆற்றுப்படுத்தியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )