மஹிந்த மீண்டும் பிரதமரா?; அந்த எண்ணமே இல்லை

மஹிந்த மீண்டும் பிரதமரா?; அந்த எண்ணமே இல்லை

அரசாங்கத்திடமோ அல்லது பொதுஜன பெரமுனவிடமோ மஹிந்த ராஜபக்ஷ்வை மீண்டும் பிரதமராக்கும் எந்த திட்டமும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ்வை நியமிக்கப் போவதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை. அவ்வாறான எந்த திட்டமும் அரசாங்கத்திலும் இல்லை பொதுஜன பெரமுனவிடமும் இல்லை.

எனினும் மஹிந்த ராஜபக்ஷ்வுடன் நெருக்கமாக இருப்பவர்களும் ஆதரவாளர்கள் சிலருமே இதனை தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பசில் ராஜபக்ஷ்வாகும் என மேதின கூட்டத்தில் தெரிவித்திருந்தனர்.

பசில் ராஜபக்ஷ் திறமையானவர் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். பொதுஜன பெரமுன கட்சியை அமைத்து, சில வருடங்களில் நாட்டை ஆட்சி செய்யும் நிலைக்கு முன்னேற்றி இருந்தார். அது அவரின் திறமையால் மேற்கொள்ளப்பட்டதாகும். ஆனால் பசில் ராஜபக்ஷ்வை அவர்கள் எந்த அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவார்கள் என்பது தெரியாது. ஏனெனில் பசில் ராஜபக்ஷ் இரட்டை பிரஜாவுரிமை உடையவர். அவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவதாக இருந்தால் அமெரிக்க பிரஜா உரிமையை அவர் இரத்துச் செய்யவேண்டும். அதனை அவர் ஒருபோதும் செய்யப்போவதில்லை என்றே தெரிவித்து வந்திருக்கிறார். அப்படி இருக்கையில் அவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதில் சட்டப் பிரச்சினை இருக்கிறது.

மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. இருந்தபோதும் ஜனாதிபதி வேட்பாளர்கள் என பலரது பெயர்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.என்றாலும் ஐக்கிய தேசிய கட்சி, பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைக்க இருக்கிறது. அதன் பிரகாரம் ஐக்கிய தேசிய கட்சி முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவே களமிறங்குவார். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம்.பல்வேறு தடவைகளில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )