
தனியாக அழைத்தால் மட்டுமே பேசுவோம்; தமிழ் மக்களின் பிரச்சனையிலும் சுயமரியாதை தேடும் ரெலோ மற்றும் புளொட்!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் .இரா.சம்பந்தன் விடுத்துள்ள அழைப்பை நிராகரிப்பதாகவும் கடந்த காலங்களில் ஜனாதிபதி தமக்கு தனிப்பட்ட அழைப்பை விடுத்ததுபோன்று நாளைய கலந்துரையாடலுக்கு அழைப்பு வராவிட்டால் அதில் கலந்து கொள்ளப்போவதில்லை என ரெலோ மற்றும் புளொட் அமைப்புகள் அறிவித்துள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நாளை நடைபெறவுள்ள சந்திப்புக்கோ அல்லது அதற்கு முன்னதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பில் இல்லத்தில் இன்று நடைபெறும் சந்திப்பிலோ ரெலோ மற்றும் புளொட் கட்சிகள் பங்கேற்கப்போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புக்கு முன்னதாக இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி, புளொட், ரெலோ ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடாக இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும், ஜனாதிபதியின் சந்திப்பு தொடர்பில் கடந்த காலங்களில் புளொட் மற்றும் ரெலோ கட்சிகளுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் எனவே இம்முறையும் அவ்வாறு அழைப்பு விடுத்தால் மாத்திரமே சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக ரெலோ மற்றும் புளொட் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

