சாணக்கியன் முட்டாள் ; மன்னிப்பு கேட்ட சப்ரி

சாணக்கியன் முட்டாள் ; மன்னிப்பு கேட்ட சப்ரி

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா. சாணக்கியனை இனவாத முட்டாள் ,மதவாதி என விமர் சித்தமைக்கு மன்னிப்புக்கோரிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி , அந்த வார்த்தைப்பிரயோகங்களை தான் வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் கூறினார்.

பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா. சாணக்கியன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ‘இனவாதி,புலி’ என்றும் வெளி விவகாரத் துறை அமைச்சர் அலி சப்ரி ‘இனவாதமுட்டாள்,மதவாதி ‘ என்றும் பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற வார்த்தைகளை பிரயோகித்து தன்னை விமர்சித்ததாக சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன் வைத்தார்.

அத்துடன் நான் இலங்கைக்கு எதிராக செயற்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறியதாகவும் ஆனால் இலங்கைக்குள் உள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரச்சினையையே அந்த மக்களின் 33,000 க்கும்மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுவந்த தான் முன் வைக்க முயன்றதாகவும் அமைச்சர் அலி சப்ரி போல் தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் வரவில்லை எனவும் அமைச்சர்கள் இருவரினதும் கருத்துக்களால் தனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்றத்தின் மாண்பு மாசுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஆகவே இவ்விருவரும் இரண்டு வாரங்கள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்குமாறும் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

இதனையடுத்து எழுந்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,

சாணக்கியன் எம்.பி. தன்னை தமிழ் மக்களின் பாதுகாவலன் என்று நினைத்துக் கொள்கிறார் .2015 ஆம் ஆண்டு ராஜபக்ஸக்களின் பிரபல்யத்துடன் தேர்தலில் வெற்றி பெறலாம் என்பதற்காக அவர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டார்.தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் ராஜபக்ஸக்களுக்கு எதிராக செயற்படுகிறார்.

முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக,அல்லது தமிழ் மக்களுக்கு எதிராக நான் கருத்துரைத்தால் சிங்கள மக்கள் எனக்கு ஆதரவு வழங்குவார்கள்,ஆனால் நான் அவ்வாறு செயற்படுபவனல்ல. ,அவ்வாறான அரசியல் கலாசாரத்தை பின்பற்றுவதுமில்லை.நான் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்காகவும் அரசியல் செய்கிறேன்,அரசியலில் ஈடுபடுகிறேன்.

நான் நீதியமைச்சராக பதவி வகித்த போது பயங்கரவாத தடுப்பு காவலில் பல ஆண்டு காலமாக தடுத்து வைக்கப்பட்ட தமிழர்களை விடுதலை செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.பயங்கரவாத தடைச்சட்டத்தை கால தேவைக்கு அமைய திருத்தம் செய்ய வேண்டிய அவசியத்தை அப்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவிடம் எடுத்துரைத்து.திருத்த யோசனைகளை முன்வைத்தேன்.

கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக அமைச்சரவையில் பலமுறை கடுமையான எதிர்ப்புக்களை முன்வைத்தேன்,அதனை அப்போது அமச்சராக இருந்த வாசுதேவ நாணயக்கார நன்கு அறிவார்.எமது சமூகத்துக்காக செய்த விடயங்களை நான் பகிரங்கப்படுத்தி,அரசியல் இலாபம் தேடவில்லை.

நான் ராஜபக்ஸக்களுக்காக முன்னிலையாகினேன் என்பதை ஒருபோதும் மறுக்கவில்லை.ராஜபக்ஸக்களின் செயற்பாடு பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது என்பதை மறுக்கவில்லை,அதே போல்ராஜபக்ஸக்கள் பயங்கரவாதத்தை இல்லாதொழித்தார்கள் என்பதையும் மறக்கக் கூடாது.நான் ராஜபக்ஸக்களுக்காக என்றும் முன்னிலையாவேன்.

சாணக்கியன் எம்.பி. யுடனான வாதத்தின் போது அந்த சூழ்நிலையில் நான் பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற வார்த்தைகளை பிரயோகித்து உரையாற்றியிருந்தால் அதற்கு கவலை தெரிவித்துக் கொள்கிறேன்,அந்த வார்த்தைகளை வாபஸ் பெற்றுக் கொள்வதுடன் சாணக்கியன் எம்.பி.யிடம் மன்னிப்புக் கோருகிறேன் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )