புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக வட ,கிழக்கில் அணி திரண்ட பெண்கள்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக வட ,கிழக்கில் அணி திரண்ட பெண்கள்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு,கிழக்கு மாகாணங்களில் சகல மாவட்டங்களிலும் நேற்று வியாழக்கிழமை அணிதிரண்ட பெண்கள் அமைப்புக்களினால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

முல்லைத்தீவில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினர் “வேண்டாம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்” என்ற பதாகையினை தாங்கியவாறு எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம் எனவும், கருத்து சுதந்திரம் பறிபோகும் என்றும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்

அதேபோன்று மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை நகர சபைக்கு முன்பாக “வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு” என அமைப்பினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்தாதே, மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள், சிறுபான்மையினரை அடக்குவதற்காக புதிய சட்டங்களை உருவாக்காதே, அச்சமின்றி வாழவிடுங்கள், இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவிடுங்கள், மக்களை வதைக்கும் சட்டங்களை உருவாக்காதீர்கள் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு – மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலகத்திற்கு முன்பாகவும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேச கிளை ஏற்பாடு செய்திருந்த இக்கவன ஈர்ப்பு போராட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மா.நடராசா, மற்றும், உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் இலங்கத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் , உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

வவுனியாவிலும் வடக்கு – கிழக்கு பெண்கள் அமைப்புகளினால் வவுனியா பத்தினியார்மகிழங்குளம், முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபை எதிர்த்து மன்னாரில் வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பின் கூட்டின் பிரதிநிதிகளுடன் மன்னார் மாவட்ட பெண்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.இதில் பெருமளவானோர் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணத்தில்,புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.இதன்போது, மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களையும் எழுப்பினர்.

அம்பாறையிலும் புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு என்ற அமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.

அம்பாறை மாவட்டம் மத்திய முகாமில் உள்ள நான்காம் கிராமம் பாமடி என்ற பிரதேசத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இதன்போது, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த கூட்டு முன்னணியின் சுமார் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் மும்மொழிகளிலுமான சுலோகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )