
கண்டியில் 203 பள்ளிகளுக்கு தொடர்ந்து பலத்த பாதுகாப்பு
கண்டி – அக்குரணை, 6 ஆம் கட்டை பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடாத்தப்படலாம் என்ற உளவுத் தகவலை அடுத்து, கண்டி பொலிஸ் வலயத்தில் உள்ள 203 பள்ளிவாசல்களுக்கும் தொடர்ச்சியாக பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு முதல் பொலிஸார், அதிரடிப் படையினர், இராணுவத்தினரை இணைத்ததாக இந்த பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்ச்சியாக செயற்படுத்தப்படுவதாக கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமில் கிரிஷாந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி, அக்குரணை பிரதேசம் பூரண இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் 118 அவசர அழைப்பு இலக்கம் ஊடாக கிடைத்த தகவல் ஒன்றினை மையப்படுத்தி, பொலிஸ் மா அதிபர் ஊடாக கண்டி உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுப்பட்ட உளவுத் தகவலுக்கு அமைய இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந் நிலையில் இந்தத் தகவல் உளவுத் துறை மூலம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேர்ணல் நலின் ஹேரத் குறிப்பிட்டார்.
இதேவேளை முஸ்லிம் பெண்களை பரிசோதிக்க முடியாது என்ற நிலையில், அபாயா போன்ற ஆடைகளை அணிந்து ஆண்கள் உள்ளே வருவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
எனவே அபாயா போன்ற ஆடைகளை அணிந்து வரும் பெண்கள் அடையாள அட்டையைக் கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், தமது கட்டளைகளை மீறி பயணிக்கும் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான அனுமதியுள்ளதாகவும் பொலிஸார், பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளனர்.
மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் வழமை போன்று பாதுகாப்பு காணப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தக் காலப்பகுதியில் தேவையற்ற ஒன்றுகூடல்களை தவிர்த்துக்கொள்ளுமாறு பள்ளி நிர்வாகங்கள் தமது பிரதேச மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

