ஜனாதிபதியின் சிங்க முகமூடிக்கு அஞ்சோம்

ஜனாதிபதியின் சிங்க முகமூடிக்கு அஞ்சோம்

ஜனாதிபதியின் சிங்க முகமூடியை பார்த்து தாம் அஞ்சப் போவதில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கல்வியை அத்தியாவசிய சேவையாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நேரத்தில் கல்வித்துறையை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பதாகவும், மதிப்பீட்டு பணிகளை கட்டாயமாக்கி அதில் கலந்தகொள்ளாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அவ்வாறு செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதா?பாடசாலைகளில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆசிரியர்கள் தாமாகவே முன்வந்து செய்வர்.

ஆனால் ரணில் – ராஜபக்‌ஷ அரசாங்கத்தினாலேயே பரீட்சைகள் தள்ளிப் போனது. இது தொடர்பான பிரச்சினையினாலேயே பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இவ்வாறு கூறுகையில் பாடசாலைகளில் இன்னும் 2023 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. பிள்ளைகளின் சீருடையும் வழங்கப்படவில்லை. 2022 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு வந்த மாணவர்களுக்கு இன்னும் சீருடை வழங்கவில்லை. கல்வியை அத்தியாவசிய சேவையாக அறிவிக்க முன்னர் இதனை செய்ய வேண்டும். ஆனால் அடக்குமுறைக்காகவே அதனை அத்தியாவசிய சேவையாக்கப் போவதாக கூறுகின்றனர்.

போசனை வேலைத்திட்டம் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. பாடசாலைகளின் பராமரிப்பு பெற்றோரிடம் இருக்கின்றது. இப்போது அத்தியாவசிய சேவை தொடர்பில் கதைத்துக்கொண்டு சிங்க முகமூடியை காட்ட முயற்சிக்கின்றார். இதற்கு நாங்கள் அஞ்சப் போவதில்லை என்றார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )