
யாழ்.மாநகர சபை முன்றலில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள நபர்!
யாழ்.மாநகர சபையின் முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நபர் ஒருவர் ஆரம்பித்துள்ளார்.
இதுதொடர்பில் தெரியவருகையில்,
யாழ் மாநகர சபைக்குட்பட்ட 72, பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் வதியும்
தம்பிராஜா பிரபாகரனின் வீட்டுச்சுவரும் அருகிலுள்ளவரின் காணி எல்லையும் ஒன்றாக காணப்படும் நிலையில், குறித்த சுவரானது அயல் வீட்டிலுள்ளவரின் கழிவு நீர் மற்றும் வெள்ள நீர் ஓடும் வாய்க்காலாக அமைந்துள்ளது. இதனால் தொடர்ந்தும் வீட்டினுள் கழிவுநீர் உட்புகும் நிலை காணப்படுகின்றது.
இப்பிரச்சினை சுமார் 7 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்தும் யாழ் மாநகர சபை மேயர், மாநகர சபை உறுப்பினர் மற்றும் மாநகர சபை ஆணையாளருக்கு இப் பிரச்சினைகள் தொடர்பாக அறியப்படுத்தியதையடுத்து குறித்த பிரச்சினையுடன் தொடர்புடையவருக்கு அதிகாரிகளூடாக எச்சரிக்கை வழங்கப்பட்டும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
இதுவரை எவ்வித தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில் இன்றைய தினம் யாழ் மாநகர சபையின் முன்றலில் அடையாள உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்துள்ளார்.
இப்பிரச்சினைக்கு ஒரு மாத காலத்தினுள் தீர்வினை உரிய தரப்பினர் பெற்றுத்தராதவிடத்து சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

